தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுமார் 4 மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து மீண்டும் திரையரங்குகள் எப்பொழுது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் பல படங்கள் வெளியாகாமல் முடங்கியுள்ளன. சில படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன. இருப்பினும் அவை திரையரங்குகளில் பார்ப்பது போன்ற அனுபவத்தை தரவில்லை என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
இந்நிலையில் திரையரங்குகள் திறக்கப்படுவது குறித்து முக்கிய தகவல் கிடைத்துள்ளன. அதன்படி இன்று (22/08/2020) மல்டிப்ளக்ஸ் உரிமையாளர்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையே முக்கிய மீட்டிங் நடைபெறவிருக்கிறது. இதனையடுத்து நல்ல செய்தி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தியேட்டர் திறக்கப்படுவது குறித்து பேசிய தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ, ''தியேட்டர்கள் எப்போது திறக்கலாம் என மத்திய அரசு செப்டம்பர் 1 ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், ஆலோசனையில் மத்திய அரசு என்ன வழிகாட்டுதல் சொல்கிறதோ அதன்படி தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்படும்'' என்றும் கூறினார்.