இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் இன்று (ஜூன் 2) அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
1943ல் பிறந்த இளையராஜாவுக்கு இப்போது 78 வயது. தமது 32 வயதில் அவரது முதல் படமான 'அன்னக்கிளி' வெளியானது. முதல் படத்திலேயே வெற்றிகரமான இசையமைப்பாளராகிய ராஜா, முதல் ஐந்தாண்டுகளுக்குள் 100 படங்களுக்கு இசையமைத்தார்.
முதலில் தன்ராஜ் மாஸ்டரிடம் நாட்டார் இசை பயின்ற ராஜா பின்னர் தமது அண்ணன் பாவலர் வரதராஜன் நடத்திய இசைக் குழுவில் தமது 14 வயதில் இசைக் கலைஞராக இணைந்தார். மேலும் தமது இளமைப் பருவத்தில் மேற்கத்திய இசையையும் கர்நாடக இசையையும் பயின்று தேர்ந்தார்.
இசையமைப்பாளர் ஆவதற்கு முன்னதாகவே ஜி.கே.வெங்கடேஷின் இசைக் குழுவில் பல திரைப்படங்களில் பணியாற்றியபோதே தன்னுடைய இசைக் கோவைகளை உருவாக்கிய இளையராஜா, 1000 திரைப்படங்களை கடந்து
இசையமைத்துக் கொண்டிருக்கிறார். தம் ஆஸ்தான பாடகர்களுள் ஒருவரும் நண்பருமான எஸ்பிபி கடந்த ஆண்டு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது இளையராஜா வெளியிட்ட காணொளி அனைவரையும் உருக வைத்தது.
பின்னர் திரைத்துறையினருடன் இணைந்து கச்சேரி நடத்தினார். இதனிடையே அண்மையில் சாலிகிராமம் பிரசாத் லேப் ரெக்கார்டிங் தியேட்டரில் இருந்து வெளியேறிய இளையராஜா கோடம்பாக்கம் எம்.எம். அரங்கதில் தமது புதிய ஸ்டூடியோவை நிறுவினார். நிறுவிய கையோடு வெற்றிமாறனின் இயக்கத்தில் சூரி-விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகும் விடுதலை திரைப்படத்துக்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் தான் அவரது பிறந்த நாளுக்கு இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அத்துடன் ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பேத்தியுடன் (யுவன் ஷங்கர் ராஜாவின் மகள் ஸியா) கீ போர்டில் ஹேப்பி பர்த்டே வாசிக்கிறார். இந்த வீடியோவை பகிர்ந்த யுவன் தமது ட்விட்டரில் என்று குறிப்பிட்டுள்ளார்.
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் மாமனிதன் படத்துக்காக இளையராஜா, யுவன் இணைந்து இசையமைத்துளனர். இந்த படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன.