பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (34) இன்று (ஜூன் 14) மும்பையிலுள்ள தன்னுடைய வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது திடீர் மரணம் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவரது முன்னாள் மேனேஜராக பணி புரிந்தவர் திஷா சலியன் என்பவர் கடந்த ஜூன் 9-ம் தேதி அதிகாலையில் தனது அபார்ட்மெண்டின் 14-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தியைக் கேட்டு சுஷாந்த் வருத்தம் தெரிவித்து தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். கிட்டத்தட்ட அவரும் அதே போன்றவொரு முடிவை, திஷா இறந்த ஐந்து நாட்களில் தேர்ந்தெடுத்ததை விதி என்பதா அல்லது இந்த மரணங்களுக்கு என்ன காரணம் என்று தெரியாமல் தவிக்கின்றனர் ரசிகர்கள்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு நீண்ட பதிவை எழுதி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார் நடிகை இலியானா. அதில் அவர் கூறியிருப்பது, 'இந்த செய்தி கடும் அதிர்ச்சியை அளிக்கிறது ...இன்று முழுவதும் இந்த செய்தி துயர் அளித்துக் கொண்டே இருக்கிறது...எனக்கு சுஷாந்தை தனிப்பட்ட முறையில் தெரியாது, ஆனால் அவரது மரணம் என்னை மிகவும் ஆழமாக பாதிக்கிறது.
அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அன்பானவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்க மட்டுமே என்னால் இயலும் ... நீங்கள் அனுபவிக்கும் வலியை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. ️
மரணம், தனிமை இது பற்றியெல்லாம் நான் சொல்ல விரும்புவது நிறைய இருக்கிறது ... நாம் எப்போதும் மிகவும் தவறாகவே புரிந்து கொள்ளப்படுகிறோம், மனிதர்களாகிய நாம், சில நேரங்களில் நாம் உண்மையிலேயே செய்ய விரும்புவதை செய்யாமல், சுருண்டு கிடந்து நம் இதயங்களை அழ வைக்கிறோம்.
நான் இந்தத் துயரில் ஆழ்ந்து கிடக்கிறேன், கிட்டத்தட்ட மூழ்கிவிட்டேன் என்று கதறி சொல்ல விரும்பும் போது, மேல் பூச்சாக நன்றாக இருக்கிறோம் என்று கூறுகிறோம், வெளியே நாம் சிரித்துக் கொண்டே இருக்கிறோம், ஆனால் உள்ளே இருக்கும் வலியை ஒதுக்கித் தள்ளுகிறோம் ...பின்னர் யாரும் பார்க்காத போது நாம் உடைந்து போய் நொறுங்குகிறோம், ஆம் நொறுங்கிப் போய்விடுகிறோம் ... நாம் அனைவரும் மனிதர்கள். ஆம் குறைகள் நிறைய உள்ளவர்கள்தான். அதனால் என்ன அது பரவாயில்லை.
மற்றவர்களிடம் உதவி கேட்பது பலவீனம் அல்ல. நீ தனியாக இல்லை என்ற அந்த உணர்வு எனக்கு நன்றாகவே தெரியும் ..பிரசாரம் செய்ய இதை நான் எழுதவில்லை, உங்கள் அனைவரிடமிருந்தும் நான் கேட்பது ஒன்றுதான், தயவு செய்து, தயவு செய்து தயவு செய்து தயவு செய்து தயவு செய்து தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். இந்த உலகுக்கு உங்கள் கருணை அதிகம் தேவை. உங்களுக்கு கருணை அதிகம். உங்களுக்கு அன்பு அதிகம். உங்களுக்கு இது பற்றிப் புரியவில்லை என்றாலும், தயவுசெய்து அனைவரிடமும் அன்பாக மட்டும் நடந்து கொள்ளுங்கள்’ என்று உருக்கமாக பதிவிட்டார் இலியானா.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக் கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத் துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்