இளையராஜாவின் இசைக்கச்சேரியான ராக் வித் ராஜா சென்னை தீவுத்திடலில் மார்ச் 18 ஆம் தேதி நடக்க உள்ளது.
இளையராஜாவின் சர்ப்ரைஸ் அபேட்
இதுவரை 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் பல்லாயிரம் பாடல்களுக்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா. திரைப்பட பாடல்கள் மட்டும் என்று இல்லாமல் இசைஞானி இளையராஜா தம்முடைய இசையை மட்டுமே கொண்டு, அதாவது பாடல் வரிகள் இல்லாமல், இசைக்கருவிகளை மட்டுமே கொண்டு உருவாக்கிய மியூசிக்கல் ஆல்பங்கள் பலவற்றையும் வெளியிட்டுள்ளார்.
அவற்றுள் ஒரு புகழ்பெற்ற ஆல்பம்தான், கடந்த 1986-ம் ஆண்டு வெளியாகி, இசைக்கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற "How to Name it" ஆல்பம். பல்வேறு தனியார் நிகழ்ச்சி, பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் Mime-களில் (பேசா நாடகம்) பின்னணி இசையாக இந்த ஆல்பத்தை பலரும் பயன்படுத்தியிருப்பதை காண முடியும். அந்த ஆல்பத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வர உள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.
கொரோனாவுக்கு முன் நடந்த கச்சேரிகள்
இளையராஜாவின் பாடல்களுக்கு ரசிகர்கள் இருப்பதை போலவே, இளையராஜாவின் இந்த வகையான மியூசிக்கல் ஆல்பங்களுக்கு உலகம் முழுவதும் மொழி, நாடு கடந்த ரசிகர்கள் உள்ளனர். அவர்களுக்காக உலகம் முழுவதும் கச்சேரிகளை இளையராஜா கடந்த வருடங்களில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சென்னை தீவுத்திடலில் மார்ச் 18 ஆம் தேதி அவரது இசைக்கச்சேரி நடக்க உள்ளது.
இளையராஜா 75
இளையராஜாவின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு தமிழகம் முழுவதும் அவரின் இசைக் கச்சேரிகள் நடந்தன. அதில் பல திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டு இளையராஜாவை வாழ்த்தி அவருடனான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். 'இளையராஜா 75' நிகழ்ச்சியில், இளையராஜாவுடன் மேடையை பகிர்ந்து கொண்டார் ஏ.ஆர். ரஹ்மான். அப்போது, புன்னகை மன்னன் படத்தில் வரும் பின்னணி இசையை, ஏ.ஆர். ரஹ்மான் மேடையிலேயே வாசித்துக் காட்டினார். இது அந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்தது. இளையராஜா 75 நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியாக அமைந்ததை அடுத்து இப்போது மீண்டும் சென்னையில் ராக் வித் ராஜா என்ற கச்சேரி நடக்க உள்ளது.
ரசிகர்களுக்காக மீண்டும் டிக்கெட்
இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் இப்போது ரசிகர்களுக்காக 1000 ரூபாய் டிக்கெட் முன் பதிவு மட்டும் அடுத்த 48 மணிநேரங்களுக்கு ஓப்பன் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் இப்போது மீண்டும் முன்பதிவு செய்துகொள்ள வசதியாக அமைந்துள்ளது.
நிகழ்ச்சியில் முன்னணிக் கலைஞர்கள்
இந்த இசைக்கசேரியில் முன்னணி இசைக் கலைஞர்களான மனோ, விபாவரி, உஷா உதூப், பவதாரணி, தேவி ஸ்ரீ பிரசாத், சுவேதா மோகன், எஸ்பி சரண், கார்த்திக் ராஜா, யுவன் மற்றும் பிரேம்ஜி அமரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.