நடிகர் சந்தானம் மூன்று வெவ்வேறு விதமான காலங்களில் பிரவேசிக்கும் கதை அமைப்புடன் கூடிய புதிய திரைப்படம் டிக்கிலோனா.
நடிகர் சந்தானம், அனகா, யோகி பாபு, ஆனந்த ராஜ், முனீஷ்காந்த், லொள்ளு சபா மாறன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தானம் டைம் மிஷினில் ட்ராவல் செய்து தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சிப்பார். தடுத்து நிறுத்திவிட்டு வேறொரு திருமணம் செய்துகொள்வார்.
ஆனால் அந்த திருமணத்திலும் பிரச்சினை என்பதால் மீண்டும், தான் தடுத்து நிறுத்த போன முதல் திருமணத்தையே நடத்துவதற்காக கடந்த காலத்துக்கு பிரவேசித்து செல்வார். இந்த கதைக்குள் காமெடியும் கலாயும் கலந்த பாணியில் சந்தானத்துக்கே உரிய ஃபார்முலாவில் இந்த திரைப்படம் உருவாகி இருந்தது.
இந்த திரைப்படத்தில் திருமணத்தின்போது வரும் ஒரு பின்னணி பாடலாக இளையராஜா இசையமைத்திருந்த, ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும்’ பாடல் இடம்பெற்றிருக்கும். இந்த பாடலை நவீன முறைக்கு ஏற்ப மாற்றங்களை செய்து ரீமிக்ஸ் செய்து போட்டிருப்பார் இளையராஜாவின் மகனும் பிரபல இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா.
டிக்கிலோனா திரைப்படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். எனவே இளையராஜாவின் இந்த பாடலை இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா பயன்படுத்தி இருப்பார். மலேசியா வாசுதேவன் பாடிய இந்த பாடலை வாலி எழுதியிருந்தார். இதனால் இவர்கள் இருவருக்கும் திரைப்படத்தின் டைட்டில் கார்டில் கிரெடிட் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த ரீமிக்ஸ் பாடலை பெரிய அளவில் ஹிட் ஆக்கும் வகையில் இந்த திரைப்படத்தில் வைத்திருப்பார்கள். கதையின் சூழலுக்கு ஏற்ப ஒரு சந்தானம் இன்னொரு சந்தானத்தை கட்டை எடுத்துக்கொண்டு அடிப்பதற்கு துரத்துவது போல் இந்த பாடலில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
இந்த பாடல் இடம் பெற்ற படம் கமல் நடித்த மைக்கேல் மதன காமராஜன் என்கிற திரைப்படம். நடிகர் கமல்ஹாசன் நான்கு விதமான கேரக்டர்களில் இந்த படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் இந்த பாடல் இடம் பெற்று பெரிய வெற்றி பெற்றிருந்தது. அந்த பாடலைதான் தற்போது டிக்கிலோனா திரைப்படத்தில் 3 சந்தானம் பயணிக்கும் இந்த டைம் மெஷின் கதைக்குள் வைத்திருப்பார்கள்.
இந்த நிலையில் இந்த பாடல் உருவான விதம் பற்றியும் இந்த பாடலுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த ஒரு விஷயம் பற்றியும் இளையராஜா தற்போது போட்டு உடைத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் வரும் பேர் வெச்சாலும் வைக்காம போனாலும் பாடலில் ஒரு சம்பவம் இருக்கிறது. அது தமாஷாக இருந்தது. இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் மற்றும் கமல் இரண்டு பேரும் இசையமைக்கும் இசை அரங்கில் வந்து அமர்ந்து இருந்தார்கள். ட்யூன்கள் போட்டிருந்தோம். டியூன் போட்டு முடித்துவிட்டு வாலி சாரை அழைத்து பாட்டு எழுதுவதற்கு கேட்டோம். அவரும் வந்து உட்கார்ந்து இருந்தார்.
அப்போது வாலி சார் சந்தம் கேட்டார். (இளையராஜா சந்தத்தை பாடுகிறார்) சந்தம் பாடியதும் வாலி அதை கிண்டல் செய்யும் தொனியில், இந்த மாதிரி சந்தமெல்லாம் கொடுத்தால் எப்படி பாடல் எழுதுவது? என்று கேட்டார். அதற்கு நான் ஏற்கனவே எழுதினது தானே? என்று கேட்டேன். ஏற்கனவே எழுதினதா? யார் எழுதினது? என்று கேட்டார். நான் வள்ளுவர் எழுதிட்டு போய் இருக்காருல்ல? என்றேன். அப்போது வாலி, வள்ளுவரா? வள்ளுவர் என்னய்யா எழுதியிருந்தார்? என்று கேட்க, அப்போது அங்கிருந்த கமல் சாரும், இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவும் என்னை பார்த்தார்கள். நான் என்ன சொல்கிறேன் என்று..
அந்தப் பாடல் “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி” என்கிற குறளில் இருந்து எடுக்கப்பட்டது என்று சொல்லி பாடிக்காட்டினேன் (சிரிக்கிறார்) எல்லாரும் ஆச்சரியப்பட்டு .. அட .. என்று அனைவரும் சிரித்தனர். என்னடா சொல்ற? என்று வாலி கேட்டார். ஆமாண்ணா... இதுதான் சந்தம் என்றேன்.. உடனே வாலி பேர் வெச்சாலும் வைக்காம போனாலும்.. என்கிற பல்லவியை கொடுத்தார்.
ஆக அந்த பாடல் “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி” என்கிற திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்டது. அதுதான் அட்சரம்” என்று சொல்லி இளையராஜா இந்த நெகிழ்வான விஷயத்தை சிரித்தபடி ஜாலியாக பகிர்ந்திருக்கிறார்.
இசைஞானி இளையராஜா தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை திரைப்படத்துக்கு இசை அமைக்கிறார். இயக்குனர் வெற்றிமாறன் இளையராஜா இணைந்திருக்கும் இந்த காம்போ பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.