பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராமன் மறைவுக்கு இசைஞானி இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners
தமிழில் 1973 ஆம் ஆண்டு வெளியான "தாயும் சேயும்" என்ற திரைப்படத்தில் பின்னணி பாடகியாக பிரபலமானவர் வாணி ஜெயராம். மொத்தம் 19 மொழிகளில் சுமார் 10,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ள வாணி ஜெயராமன், தமிழில் மட்டும் சுமார் 1500 பாடல்கள் வரை பாடி உள்ளார். மல்லிகை என் மன்னன் மயங்கும், ஏழு ஸ்வரங்களில் எத்தனை ராகம் உள்ளிட்ட பாடல்களை கேட்கும் போது பலரும் வாணி ஜெயராம் குரலில் சொக்கி போய் விடுவார்கள்.
தனது மிகவும் இனிமையான குரல்கள் மூலம் பல பாடல்களை பாடி ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்து வைத்திருந்தவர் வாணி ஜெயராம்.
Images are subject to © copyright to their respective owners
சிறந்த பாடகருக்கான தேசிய விருதையும் மூன்று முறை வென்றிருந்தார் வாணி ஜெயராம். வாணி ஜெயராமுக்கு கடந்த குடியரசு தின விழாவின் போது பத்ம பூஷன் விருதும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தமது 78 ஆவது வயதில் வாணி ஜெயராம் நேற்று காலமானார். இவரது மறைவுக்கு இசைஞானி இளையராஜா வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில், "இந்திய திரை இசை உலகில் 10 ஆயிரம் பாடலுக்கு மேல் பாடி தனக்கென தனி இடத்தை பெற்ற திருமதி வாணி ஜெயராம் அவர்கள் காலமான செய்தி கேட்டு மிகுந்த துயர் உற்றேன். எனக்கு மிகவும் அற்புதமான பாடல்களை பாடியிருக்கிறார்.
அந்த பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. அவருடைய குரலும் அவர் பாடும் முறையும் பாடலை மேலும் அழகுபடுத்தியது என்பதும் ரசிகர்களுக்கு நன்கு தெரியும். இந்த நேரத்தில் அவருடைய மறைவு செய்தி கேட்டு மிகுந்த துயர் உற்றேன். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை வழிபட்டு கொள்கிறேன்" என இளையராஜா பேசியுள்ளார்.
— Ilaiyaraaja (@ilaiyaraaja) February 4, 2023