நடிகர் சூர்யா தயாரித்து நடித்து அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் நேரடியாக கடந்த நவம்பர் 2-ஆம் தேதி வெளியான படம் ஜெய்பீம்.
பழங்குடி இருளர் இன இளைஞர்களை பொய் வழக்கில் கைது செய்து, காவல்நிலையத்தில் வைத்து மனித உரிமை அத்துமீறலைச் செய்யும் காவல்துறையினர் குறித்த இந்த கதையை த.செ.ஞானவேல் இயக்கியிருந்தார்.
சூர்யா வழக்கறிஞராக நடிக்க, கோர்ட் ரூம் டிராமாவாக உருவான இந்த படத்தில் இருளர் இன மக்களாக மணிகண்டன் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் நடித்திருந்தனர். இப்படத்தில் மனித உரிமை மீறல் செய்யும் காவலர் குருமூர்த்தியாக இயக்குநர் மற்றும் நடிகர் தமிழரசன் நடித்துள்ளார்.
இதனிடையே உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்டதாக படக்குழுவினரால் கூறப்பட்ட இந்த படத்தில் இடம்பெற்ற குறிப்பிட்ட காட்சிகளின் பின்னணியில் வரும் குறிப்பிட்ட சமூக குறியீடு மற்றும் கதாபாத்திரங்களின் பெயர் உள்ளிட்டவை சர்ச்சையை ஏற்படுத்தின.
இதனைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் M.P “படைப்புச் சுதந்திரம் எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்த பயன்படுத்தப் படக்கூடாது: மக்களின் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்!” என்று குறிப்பிட்டு ஜெய்பீம் படத்தில் மோசமாக நடந்துகொள்ளும் காவலரின் பின்னணியில் வைக்கப்பட்டிருந்த குறிப்பிட்ட சமூக மக்களின் குறியீட்டுச் சின்னம் மற்றும் அவரது பெயர் உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த அறிக்கைக்கு தயாரிப்பு தரப்பில் இருந்து நடிகர் சூர்யா விளக்கம் அளித்து பதில் அறிக்கையை வெளியிட்டதுடன், படத்தில் இடம்பெற்ற குறிப்பிட்ட சமூக மக்களின் குறியீட்டுச் சின்னம் நீக்கப்பட்டுவிட்டதாகவும், பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம் என்றும் படைப்புச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதனிடையே சூர்யாவை தாக்கினால் பணம் தருவதாக சிலர் முன்வைத்த கருத்துக்களும் இணையதளத்தில் பரவிவந்தன.
அதன் பின்னர், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தமது அறிக்கையில் “அந்த முத்திரையை படத்தில் பயன்படுத்தியதில், தயாரிப்பு நிறுவனத்திற்கோ, படத்தின் கதாநாயகன் திரு.சூர்யாவிற்கோ எள்ளளவும் தொடர்பு இல்லாத நிலையில், உங்கள் கட்சியினர் திரு.சூர்யாவை தொடர்ந்து விமர்சித்து வருவது எங்கள் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது” என்று தெரிவித்திருந்தது.
மேலும், “அரசியல், ஜாதி, மத, இன சார்பு இன்றி சமூக அக்கறையோடு ஈகை குணத்துடன், விளிம்பு நிலை மாணவர்கள் மீது விருட்சமான பார்வை கொண்டு கல்விப் பணியில் கலங்கரை விளக்காய் செயலாற்றி வரும் திரு.சூர்யா அவர்களை விமர்சிப்பதை தவிர்க்கும்படி வருத்தத்துடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.” என்றும் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ்க்கு எழுதிய அந்த அறிக்கையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வேண்டுகோள் விடுத்திருந்தது.
இந்நிலையில் ஜெய்பீம் குறித்து தம்முடைய கருத்தை பகிர்ந்துள்ள இயக்குநர் & நடிகர் அமீர், “சமூகநீதியை நிலைநாட்ட வற்புறுத்தும் திரைப்படைப்புகளையும், அதை மிகுந்த சிரமத்துடன் உருவாக்கும் படைப்பாளிகளையும் காக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல. ஒரு நல்ல சமூகத்தின் கடமையும் கூட. அந்த வகையில் “ஜெய்பீம்” படக்குழுவினருடன் எப்போதும் நான்… இப்படிக்கு அமீர்!” என்று குறிப்பிட்டுள்ளார்.