சென்னை கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக எழுந்த புகார்கள் பரபரப்பாகி வருகின்றன.
இந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இதன் பேரில் சில பேராசிரியர்களை சஸ்பெண்ட் செய்தும் பேராசிரியர் ஹரிபத்மன் என்பவரை கைது செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில்தான் இந்த விவகாரம் குறித்து பேசிய பிரபல ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்த பிக்பாஸ் போட்டியாளரும், நடிகையுமான அபிராமி வெங்கடாச்சலம், “நான் கலாஷேத்ராவில் படித்த முன்னாள் மாணவி. ஒரு பிரச்சனையை ஒரு பக்கம் மட்டுமே இருந்து பார்க்க கூடாது. நான் படித்த வரை எனக்கு எந்த விதமான பாலியல் தொல்லையும் ஏற்பட்டதில்லை. அதே சமயம் இந்த மாணவிகளை அழுத்தம் தந்து இப்படி பேச சொல்வதாக எண்ணுகிறேன். இதே போல் இவர்களை இப்படி பேச சொல்லும் ஆசிரியர்களுக்கும் அழுத்தம் கொடுக்கப்படுவதாக அறிகிறேன்” என்று குறிப்பிட்ட அவர்களின் பெயரை பேட்டியில் கூறி இருக்கிறார்.
இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் தளத்துக்கு பிரத்தியேக பேட்டி அளித்திருக்கும் நடிகை அபிராமி கலாஷேத்ரா குறித்த தன்னுடைய கருத்துக்கள் மற்றும் பேச்சுகள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்து இருந்தார். அதன்படி, “இந்த விவகாரம் குறித்த விசாரணைகள் சென்று கொண்டிருக்கிறது என்பதால் அவற்றை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமல் பேச வேண்டாம் என்பதுதான் நான் சொன்னது. அத்துடன் நான் படித்த கல்லூரி என்பதால் நான் இதை பற்றி பேச முன் வருகிறேன். அதே சமயம் பாதிக்கப்படுபவர்களுக்கு எதிரானது அல்ல என் பேச்சு. அவர்களிடமும் விசாரிக்க வேண்டும், நான் பேச வேண்டும். ஆனால் அவர்கள் அழுத்தத்துக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பது என் பார்வை. ஏனென்றால் இது ஏற்கனவே நடந்தது. நாங்கள் படிக்கும் பொழுதும் இப்படி மூளைச்சலவை செய்யப்பட்டு சில மாணவிகள் அழுத்தத்துக்கு உள்ளாக்கப்படடார்கள். அது இப்போதும் தொடரலாம் என்று நான் நம்புகிறேன்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள பேராசிரியர் தரப்புக்கும் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும். ஒரு தரப்பு பார்வையை மட்டுமே வைத்துக்கொண்டு முடிவெடுக்க கூடாது. அனைத்தும் விசாரணையில் இருக்கிறது எனும் பொழுது யூகத்தின் அடிப்படையில் கலாஷேத்ராவின் புகழுக்கு கலங்கம் விளைவிப்பதற்கு எதிராக முன்னாள் மாணவியாக நான் முன் வந்து நிற்கிறேன். அவ்வளவுதான். இதே போல் மாணவிகளிடம் பேசுவதற்கு நான் விரும்புகிறேன். அப்போதுதான் உண்மையில் என்ன நடந்தது என தெரியவரும். ஒருவேளை அவர்கள் உண்மையில் பாதிக்கப்பட்டிருந்தால் நான் அவர்களின் பக்கம் நிற்பேன், நேர்கொண்ட பார்வையில் சொன்னது மாதிரி NO Means NO தான் எனது நிலைப்பாடும். ஆனால் என்னையே ஹரி பத்மநாபனுக்கு எதிராக பேசச் சொல்ல முயற்சித்தார்கள். அதுபற்றி நிறைய சொல்லிவிட்டேன்” என தெரிவித்துள்ளார்.