டெல்லியில் நடைபெற்ற 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இதில், சிறந்த நடிகர் தனுஷ் (அசுரன்), சிறந்த துணை நடிகர் விஜய்சேதுபதி (சூப்பர் டீலக்ஸ் ), ஜூரி விருது பார்த்திபன் (ஒத்த செருப்பு), சிறந்த தமிழ் படம் விருது வென்ற படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் (அசுரன்), சிறந்த இசையமைப்பாளர் டி.இமான் (விஸ்வாசம்-கண்ணான கண்ணே), சிறந்த ஒலிக்கலவை ரசூல் பூக்குட்டி (ஒத்த செருப்பு), சிறந்த குழந்தை நட்சத்திரம் நாக விஷால் (கே.டி (எ) கருப்புதுரை) என தமிழ்த் திரைத்துறை கலைஞர்களுக்கு தேசிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவுக்காக ரஜினியின் குடும்பத்தினரில் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், தனுஷின் மகன்கள் அனைவரும் சென்றிருந்தனர்.
குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பிறகு பேசிய ரஜினிகாந்த், அந்த விருதை தனது குருநாதர் கே.பாலசந்தர்க்கு அர்ப்பணிப்பதாக குறிப்பிட்டதுடன், தமது சகோதரர், பேருந்து ஊழியரும் நண்பருமான லால் பகதூர், கர்நாடக மற்றும் தமிழ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
இதேபோல், இந்த விழாவில் 'அசுரன்' படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்ற தனுஷ், சிறு வயதில் இருந்து திரையில் பார்த்து கைதட்டி விசிலடித்த சூப்பர் ஸ்டார் ரஜினி சார் தாதா சாகேப் பால்கே விருது வாங்கிய அதே மேடையில், தானும் தேசிய விருது வாங்கியது இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருப்பதாக பத்திரிகையாளர்களிடையே பேசும்போது தெரிவித்தார்.
இந்நிலையில் தங்களது விருதுகளுடன் ரஜினி மற்றும் தனுஷ் இருவரும் நிற்கும் ஒற்றை புகைப்படத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், "They are mine ... இது வரலாறு ..பெருமைக்குரிய மகள்.. பெருமைக்குரிய மனைவி" என பதிவிட்டுள்ளார்.
To my fans ❤️❤️❤️❤️❤️ pic.twitter.com/USEEJLRGFR
— Dhanush (@dhanushkraja) October 25, 2021
இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் தனுஷ், தாம் பெற்ற விருதின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து “எமது ரசிகர்களுக்கு..” என குறிப்பிட்டுள்ளார்.