லைகா நிறுவனம் சார்பில் இயக்குநர் ஷங்கருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வந்த படம் இந்தியன்-2. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு 'இந்தியன் 2' படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அதனால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன.
இதனிடையே, தெலுங்கு ஹீரோ ராம் சரண் தேஜா நடிக்கும் படத்தை இயக்க, ஷங்கர் தயாராகி வருகிறார். இதை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். ‘அந்நியன்’ படத்தின் இந்தி ரீமேக்கையும் ஷங்கர் இயக்க இருக்கிறார். இதனால் ’இந்தியன் 2’ படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல் பிற படங்களை இயக்க, இயக்குநர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி, லைகா நிறுவனம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இருதரப்புக்கும் இடையே தீர்வு காணும் மத்தியஸ்தராக உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை நியமித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இடைக்கால மனுக்கள் மீது இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி சதீஷ்குமார், லைகாவின் இரு இடைக்கால மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.