ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகி வருகிறது.
விடுதலை படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில் விடுதலை படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை ரிலீஸ் செய்துள்ளது. இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் தளத்துக்கு பிரத்தியேக பேட்டியை அளித்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.
இதில் இளையராஜாவின் இசை குறித்து பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “எனக்கு மியூசிக் என்றாலே இளையராஜாதான் தெரியும். எல்லாரையும் போல நானும் இளையராஜா பாடல்களை கேட்டு வளர்ந்தேன். அவருடைய இசை மனம் எப்படி பணிபுரிகிறது என்பதை தெரிந்து கொள்வதே எனக்கு ஆர்வமாக இருந்தது. அந்த அனுபவம்தான் விடுதலை திரைப்படத்தின்போது அலாதியானது. முன்னதாக ராஜா சார் போட்டு கொடுத்த இரண்டு பாடல்களை எடுத்துக்கொண்டு கடம்பூருக்கு படப்பிடிப்புக்கு சென்று விட்டோம்.
திரும்பி வந்தபோது அந்த இரண்டு பாடல்களும் விஷுவலுடன் பொருந்தி வரவில்லை. நான் இதை ராஜா சாரிடம் சொன்னேன். அவர் ப்ரொஜெக்டரில் பார்த்துவிட்டு வேற மியூசிக் பண்ணலாம் என்று குறிப்பிட்டார். இதேபோல் சில காட்சிகளை ட்ராக் வாசித்துக் கொடுத்தார். அவற்றை வைத்து சில காட்சிகளை எடிட் செய்து பார்த்தேன். பாடல்களைப் பொறுத்தவரை நான் சில விஷயங்களை வார்த்தைகளாக சொல்வேன். என் மன உணர்வுகள் தான் அவை. அவற்றை ஒரு ஒரு வார்த்தைகளாக அவரிடம் சொல்கிறேன். உதாரணமாக இயற்கையின் உன்னதம் என்று நான் சொல்லும் பொழுது அவர் அந்த வார்த்தையை வைத்துக்கொண்டு ஒரு இசையை கொடுப்பார். அது என் மனசுக்குள் நான் கொண்டிருந்த அதே உணர்வை இசையாக பிரதிபலிக்கிறது. அது ஒரு மேஜிக்காக இருந்தது. இப்போதும் நான் சில கதைகளையோ திரைக்கதைகளையோ எழுதும்போது பின்னணியில் மெல்லிய சத்தத்தில் இளையராஜா பாடல்களை ஒலிக்க விட்டுக் கொண்டு எழுதுகிறேன்” என பேசியுள்ளார்.