சென்னை, பிப்ரவரி 6, 2023: ரசிகர்களை கொள்ளை கொண்ட ஒரு தேவதையின் திருமணமாக, உணர்வுப்பூர்வமான தருணங்கள், மனம் நெகிழும் காட்சிகள், சந்தோஷ கொண்டாட்டங்கள் மற்றும் பல மறக்க முடியாத நிகழ்வுகளுடன் ஹன்சிகா மோத்வானி - சோஹேல் கதுரியாவின் திருமணத்தில் நடந்தது.
இந்த பிரமாண்டமான திருமணம் நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டது. இந்த திருமண விழா நிகழ்வை கண்டுகளிக்க ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் ‘ஹன்சிகாவின் லவ், ஷாதி, டிராமா’ நிகழ்வின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. மேற்படி, இந்நிகழ்ச்சி பிப்ரவரி 10ஆம் தேதி முதல் ஒளிப்பரப்பாகவுள்ளது.
இந்த நிகழ்ச்சி குறித்து நடிகை ஹன்சிகா மோத்வானி கூறுகையில்.., “சிறுவயதிலிருந்தே எனக்கு என்னுடைய திருமணம் பற்றிய கனவு நிறைய இருந்தது. எனக்கும் சோஹேலுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தபோது, எனது முழு குடும்பமும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது, எனது கனவுகள் நனவாகவுள்ளது என்பதை உணர்ந்தேன். திருமண நாளை நோக்கிய பயணத்தின் ஒவ்வொரு நொடியையும் பத்திரமாக பொக்கிஷப்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம், எனவே முழு நிகழ்வையும் படமாக்க முடிவு செய்தோம்.
ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் தான் திருமணம் நடந்தது, இது என்னுடைய கனவு ஸ்தலம். எனது கனவு திருமணத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் திட்டமிட்டு முடிக்க ஆறு வாரங்கள் ஆனது! அது ஒரு ரோலர் கோஸ்டர் பயணமாக இருந்தது. அந்த ஆறு வாரங்களில் நாங்கள் சிரித்தோம், அழுதோம், சண்டையிட்டோம், ஆனால் இறுதியில் ஒரு விசித்திர மாயாஜாலமாக என் கனவு திருமணம் நடந்தேறியது. எனது மகிழ்ச்சியை அந்த இனிமையான தருணங்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், அதைச் செய்வதற்கான ஒரு தளத்தை எனக்கு வழங்கியதற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள இந்த ட்ரெய்லரில் பேசிய ஹன்சிகா, “பொதும பார்வையில் நான் இதற்கு முன்பாக ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். எனினும் அதுபற்றி நான் மீண்டும் தொடர விரும்பவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த நிகழ்ச்சி நடிகை ஹன்சிகா மோத்வானி, சோஹேல் கதுரியாவை திருமணம் செய்து கொள்வதாக அறிவித்த கணம் முதல், திருமண திட்டமிடல்கள், திருமண வடிவமைப்பாளர்கள் மற்றும் குடும்பத்தினர் திருமணத்தை நடத்திய விதங்கள் அனைத்தையும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் நிகழ்ச்சியான 'ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா' காண்பிக்கும். ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் வெறும் ஆறு வாரங்களில் நடந்த இந்த திருமண நிகழ்ச்சி, பார்வையாளர்களுக்கு ஹன்சிகாவும் அவரது குடும்பத்தினரும் இந்த திருமணத்திற்கு வந்த சிறு சிறு பரபரப்பு நொடிகள் அனைத்தையும் எப்படி சமாளித்தார்கள் என்பது பற்றி ஒரு முழு பார்வையைக் கொடுக்கும் என்று நிகழ்ச்சிதாரர்கள் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.