நடிகர் கவுண்டமணியின் காமெடிக்கு ரசிகர்களாகாதவர்களே இருக்க முடியாது. நக்கல், நையாண்டி, கலகலப்பு என அனைத்துக்கும் பேர் போனவர் கவுண்டமணி.
அடிக்கடி கவுண்ட்டர்களை போட்டுக்கொண்டே இருப்பவர் என்பதால் அவர் இயற்பெயர் சுப்பிரமணி என்றாலும், புனைப்பெயர் கவுண்டமணி என்றானது. எளிமையும் எதார்த்தமும் கவுண்டமணியின் குணம் என்றும் திரைத்துறையில் பலரும் கூறுவர். அதே சமயம் மனதில் பட்டதை நேரடியாக பேசும் குணம் படைத்த கவுண்டமணி விளம்பரத்தனமான பேச்சு, போலித்தனமான பந்தா பகட்டுகள் எதையும் செய்ய மாட்டார். அதற்கு மாறாக அவ்வாறு இருப்பவர்களை கலாய்த்து தள்ளுவார். அப்படிப்பட்ட கவுண்டமணியின் உற்ற நண்பன் தான் நடிகர் சத்யராஜ்.
நடிகர் சத்யராஜ், கவுண்டமணி காம்பினேஷில் உருவான திரைப்படங்கள் இன்னும் ஒரு படி தூக்கலான நக்கல், அரசியல் நையாண்டி வசனங்கள், குசும்புகள், அலும்புகளுடன் கூடிய தரமான சம்பவங்களாகவே இருக்கும். திரைப்படத்தில் மட்டுமல்லாமல், இருவரும் இயல்பாகவே அப்படி கலகலப்பான நட்புறவுடன் இருப்பவர்கள் தான். அப்படி ஒரு வேளையில் கவுண்டமணியுடன் சத்யராஜின் குடும்பத்தினர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் கவுண்டமணியுடன் சத்யராஜின் மனைவி, மகள், மற்றும் மகன் சிபி சத்யராஜ் உள்ளிட்டோர் உள்ளனர். இதில் சிபி சத்யராஜூம் அவரது சகோதரியும் சிறுவர்களாக உள்ளனர். சிபி சத்யராஜ் அண்மையில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவான கன்னட ரீமேக் படமான கபடதாரி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அந்த படமும் நன்மதிப்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: ‘பிக்பாஸ் சீசன் 5ல் பங்கேற்கிறேனா?’.. மனம் திறந்த குக் வித் கோமாளி பிரபலம்!