சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று 2 தங்க பதக்கங்கள் வென்ற மாணவி இலக்கியாவிற்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினர் தங்கம் பரிசளித்து பாராட்டியுள்ளனர்.
சென்னை கோயம்பேடு சந்தையில் சுமை தூக்கும் கூலி தொழிலாளியின் மகளான இலக்கியா, தனியார் பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த மே. 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை மலேசியாவில் சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
அதில், 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில், இந்தியா சார்பாக பங்கேற்ற 21 பேரில் மாணவி இலக்கியாவும் ஒருவர். மொத்தம் 8 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற இந்த போட்டியின் இறுதியில் 2 தங்க பதக்கங்களை வென்று மாணவி இலக்கியா சாதனை படைத்துள்ளார்.
சிறுவயது முதலே கராத்தே மீது அதிக ஆர்வம் கொண்ட இலக்கியாவை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர் மன்றத்தினர் அவரை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளனர். அத்துடன், தங்க சங்கிலி ஒன்றையும் பரிசளித்துள்ளனர்.
சமீபத்தில் சர்வதேச ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்துவுக்கு நடிகர் விஜய் சேதுபதி தனது ரசிகர்க் மன்றத்தின் மூலம் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.