மணிரத்னம், ஜெயேந்திரா தயாரிப்பில், 9 இயக்குநர்கள், 9 கதைகள் சேர்ந்த ‘நவரசா’ ஆந்தாலஜி படம் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நேரடியாக நெட்ஃபிளிக்ஸில் ரிலீஸ் ஆகிறது. இந்த தொகுப்பில் இடம் பெறும் ‘கிட்டார் கம்பி மேலே நின்று’எனும் பட பகுதியை இயக்கியுள்ளார் கவுதம் மேனன். இது தொடர்பாக Behindwoods-க்கு Exclusive பேட்டி அளித்துள்ள அவர் பல்வேறு சுவாரஸ்யங்களை பகிர்ந்துள்ளார்.
பேட்டியாளர்: ‘மின்னலே’வில் ஒரு வார்த்தையில் டைட்டில், பின்னர் ‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’, ‘வேட்டையாடு விளையாடு’ என 2 வார்த்தைகளில் டைட்டில், பின்னர் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என 3 வார்த்தைகளில் டைட்டில் அண்மைக்காலங்களில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, ‘கார்த்திக் டயல் செய்த எண்’ தற்போது ’ நவரசாவின் நீங்கள் எடுக்கும் பகுதிக்கு ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ என 4 வார்த்தைகளில் டைட்டில்... இந்த வார்த்தை கோர்வை எப்படி உங்களுக்கு அமைகிறது?
கௌதம் மேனன்: டைட்டில் இப்படி ஒரு வரி, 2 வரி தான் இருக்கணும் என நான் அந்த அளவுக்கு எல்லாம் நான் யோசித்ததில்லை. அந்த கதைக்கு இன்ஸ்பிரேஷனாக காத்து வாக்குல ஒன்னு வரும். அதை தான் டைட்டிலாக வெச்சிருக்கேன். இந்த டைட்டிலும் அப்படித்தான்.. இந்த பகுதியில் வரும் ‘தூரிகா’ பாட்டுல இருந்து வைத்திருக்கிறேன். எனக்கு சரின்னு பட்டுச்சு வெச்சுட்டேன்.
பேட்டியாளர்: வழக்கமாகவே உங்கள் படங்களில் நவரசங்களும் அடங்கியிருக்கும். நவரசாவின் பகுதியான உங்கள் படத்தில் வரும் ‘லவ்’ மற்ற உங்களது மற்ற படங்களில் இருக்கும் ‘லவ்’வில் இருந்து எந்த அளவுக்கு வித்தியாசமாக இருக்க போகிறது?
கௌதம் மேனன்: வித்தியாசமா தான் பண்ணியிருக்கோம் என நினைக்கிறேன். 2 பேருக்கு நடுவில் ஓர் இரவு கூட முடியாத சூழலில், மகிழ்ச்சி, துன்பம் என எல்லாம் பின்னிப் பிணைந்த ஒரு கதையாக இருக்கும். அதுவே வித்தியாசமாக தான் இருக்கும்.
பின்னர் தூரிகா பாடலின் சில வரிகளை மென்மையாக பாடுகிறார் கவுதம்.
பேட்டியாளர்: இந்த படத்தில் சூர்யா சாரின் ஹேர் ஸ்டைல், லுக், ஹேண்ட்சமாக இருக்கிறது. இதை எப்படி செலக்ட் பண்ணீங்க?
கௌதம் மேனன்: அவரை அண்மையில் பார்த்த படங்களில் இருந்து வேறொரு லுக்கை செலக்ட் பண்ண நினைத்தோம். அதைத்தான் அவரும் விரும்பினார். அதை வைத்து தான் வொர்க் பண்ணினோம்.
பேட்டியாளர்: ராஜா சாரின் எந்த பாட்டு இந்த கதைக்கு இன்ஸ்பிரேஷன்?
கௌதம் மேனன்: ராஜா சாரின் ஒரு பாடலின் பின்னணி இசையில் இருந்து இன்ஸ்பிரேஷன் ஆகி ஒரு பாடலை பண்ணினோம். அந்த பாடலை வைத்து, அதைச்சுற்றி எழுதப்பட்ட கதைதான் ‘கிட்டார் கம்பி மேலே நின்று’. ஒரு கதையை எழுத எனக்கு மியூசிக் இன்ஸ்பிரேஷன் ஆகிறது. எந்த எமோஷனையும் லிரிக்கலாகவும், மியூசிக்கலாகவும் சொல்ல வேண்டும் என்று எனக்கு இயல்பாக தோன்றும். அது இரண்டுமே எனக்கு வேலை செய்திருக்கிறது.
பேட்டியாளர்: ‘தூரிகா’ பாடலை பற்றி?
கௌதம் மேனன்: தூரிகா பாடல் தான், ராஜா சாரின் பாடலின் பின்னணி இசையின் இன்ஸ்பிரேஷனால் உருவான பாடல். இந்த படத்தில் சூர்யா இசைக்கலைஞர், பாடகர் என்பதால் படம் முழுவதும் ஒரே பாடகரின் குரல் இருக்க வேண்டும் என்று கார்த்திக்கை பாடவைத்துள்ளோம். கார்க்கி வரிகள். எனக்கு பிடித்த பாடல்.
பேட்டியாளர்: கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பின் கிட்டார்- சூர்யா - ஜிவிஎம் .. மேஜிக் இந்த படத்தில் எப்படி இருக்கு?
கௌதம் மேனன்: இந்த காம்போ நல்லாருக்காதோ.. என்று கருதி தான் அந்த மாதிரி படங்களை நாங்கள் பண்ணவில்லை. ஆனால் இந்த முறை, இந்த ஐடியாவை கேட்டதுமே எங்களுக்கு இதுதான் தோன்றியது. 2 பேருக்கு இடையில் இருக்கும் ஒரு Vibe.. இவர்களை சுற்றி இருக்கும் ஒரு மியூசிக்கல் அட்மாஸ்பியர்.. இதற்கு எனக்கு சூர்யா வேண்டும் என்று தெளிவாக இருந்தேன். டிஸ்கஸ் செய்தோம். பி.சி.ஸ்ரீராம் சார் ஒளிப்பதிவு செய்தார். சூர்யா - பிரயாகா இருவருமே ஸ்கிரிப்டை உள்வாங்கி நடித்தார்கள். இவர்களின் கெமிஸ்ட்ரியை கொண்டு வர முடிந்தது. இந்த படமே 2 பேரின் ஒரு மாலை நேரம் தான்!
பேட்டியாளர்: பி.சி.ஸ்ரீராம் சார் மாதிரி ஒரு லிஜண்ட்-உடன் பணிபுரியும்போது அவரிடம் இருந்து கற்றுக்கொண்ட அனுபவங்கள் எப்படி இருந்தது?
கௌதம் மேனன்: முழுமையான அழகான Learning-தான். மியூசிக் டைரக்டர் கார்த்திக் கூட லொகேஷனில் இருந்தார். அனைவருமே ஷூட்டிங்கில் பி.சி.ஸ்ரீராம் என்கிற லிஜண்ட் பணிபுரிவதை பார்த்தோம். அவர் எங்களிடம் ஒரு நண்பராகவே பழகினார். சூர்யாவும் படப்பிடிப்பை மிகவும் ரசித்தார்.
பேட்டியாளர்: மணி சாருடன் ஒரு புராஜக்டில் இணைய வேண்டும் என்று முந்தைய நாட்களில் சொல்லியிருந்தீர்கள். தற்போது இணைந்துள்ளீர்கள்.
கௌதம் மேனன்: ஜெயேந்திரா சார் மற்றும் மணி சார் அழைத்தார்கள். இந்த படம் ஒரு நல்ல முன்னெடுப்பு. சூர்யாவும் இதே தான் சொன்னார். ஸ்கிரிப்ட் அனுப்பினோம். மணி சாருக்கு மிகவும் பிடித்தது. மணி சாருடன் பணிபுரிவது 16,17 வயதுகளில் என் கனவுகளாக இருந்தது. இந்த படத்தை ஒரு மியூசிக்கல் படமாக தான் முயற்சி செய்துள்ளேன். பிரேக் அப்-ஆ இருந்தாலும் ஒரு பாசிடிவான கதையாக இருப்பதை ‘விண்ணைத் தாண்டி வருவாயா’-படத்தில் பார்த்திருப்போம். அப்படி ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ ஒரு பாசிடிவாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒரு படமாக, இந்த படத்தில் வரும் காதலர்களை இன்ஸ்பையர் பண்ணும் படமாக, அவர்களின் வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் படமாக இருக்கும்.