குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடத்த பரத் தற்போது தன்னுடைய சொந்த தொழிலை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நமது சேனலுக்கு அவர் பிரத்யேக நேர்காணல் ஒன்றையும் அளித்திருக்கிறார்.
தமிழில் வானத்தை போல, ப்ரண்ட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் நடிகர் பரத். அதேபோல சின்னத்திரையிலும் பல சீரியல்களில் அவர் நடித்து உள்ளார். இந்நிலையில் சொந்தமாக ஐஸ் கிரீம் நிலையம் ஒன்றை நடத்திவரும் பரத் தனக்கென்று சொந்தமாக ஏதாவது வேண்டும் என நினைத்து இந்த தொழிலில் இறங்கியதாக தன்னம்பிக்கையுடன் கூறுகிறார்.
சிறுவயதிலேயே நடிப்பு துறைக்குள் சென்றுவிட்டு தொழில் செய்ய முடிவெடுத்தது குறித்து பேசிய அவர்,"சிறிய வயதிலேயே ரசிகர் கூட்டங்களை பார்த்திருக்கிறேன். ஒருகட்டத்தில் சினிமா மீது இருந்த ஆர்வம் குறைய துவங்கியது. பள்ளியை முடித்த பிறகு எனக்கான வாய்ப்புகளும் குறைந்தன. அப்போது எனக்கென தனியாக ஒன்றை உருவாக்க வேண்டும் என நினைத்தேன். விஸ்காம் முடித்த பிறகு, எம்பிஏ படித்தேன். அதன்பிறகு விளம்பர நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அதன்பிறகு தான் இந்த கடையை துவங்கினேன்" என்றார்.
தொடர்ந்து ஐஸ் கிரீம் வியாபாரத்தில் இறங்கியதற்கான காரணம் குறித்து பேசிய பரத்,"சிறிய வயதில் எனக்கு ஐஸ் கிரீம் ரொம்ப பிடிக்கும். அதுதான் எல்லாத்துக்கும் காரணமாக அமைந்தது. கடைக்கு போனா ஒன்று அல்லது இரண்டு தான் சாப்பிடுவோம். ஆனால், இது என் சொந்த கடை. இன்னும் ஐஸ் கிரீம் மீதுள்ள பிணைப்பு போகவில்லை" என புன்னகையுடன் கூறுகிறார்.
சிறுவயதில் தனது அம்மா நடன பள்ளியில் தன்னை சேர்த்துவிட்டதாகவும் அதன்மூலம் வாய்ப்புகள் வரும் என அவர் எதிர்பார்த்ததாகவும் பரத் கூறியுள்ளார். பின்னர் தனது பள்ளி வாழ்க்கை குறித்து அவர் பேசுகையில்,"நான் சிறுவயதில் பள்ளிக்கு அதிகமாக சென்றதே இல்லை. ஆறு அல்லது ஏழாம் வகுப்பு படிக்கும்போது அதிகபட்சமாக 3 மாதம் தான் பள்ளிக்கு சென்றிருப்பேன். அப்போது சிபிஎஸ்சி பாடப்பிரிவில் படித்துவந்தேன். எனவே சினிமாவில் நடித்துக்கொண்டு படிப்பையும் தொடர முடியாது எனக்கூறி தலைமை ஆசிரியர் வேறு பள்ளிக்கு பரிந்துரை செய்தார். அந்த பள்ளியுடைய தலைமை ஆசிரியர் என்னுடைய ரசிகர். அப்போது ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் நடித்து வந்தேன். ஆனாலும், என் நண்பர்கள் என்னிடத்தில் சகஜமாகவே பழகினார்கள். இப்படித்தான் என் பள்ளிக்காலம் சென்றது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்," இப்போதும் சிறிய ரோல்களில் நடிக்க அழைப்பு வருகிறது. குறும்படங்களில் நடித்திருக்கிறேன். அதற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் போதுமானது. தொழிலை விட்டுவிட்டு செல்ல முடியாது. அதே நேரத்தில் தொழிலை மேம்படுத்திவிட்டு மீண்டும் சினிமாவுக்குள் நுழைவேன்" என தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் பரத்.