நடிகர் விஜய் நடிப்பில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு (13.04.2022) வெளியாகி இருந்த பீஸ்ட் திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கி இருந்த இந்த திரைப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இவர்களுடன் செல்வராகவன், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
மேலும், பீஸ்ட் திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்தார். பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியாகி இருந்த பீஸ்ட் திரைப்படத்தை, மக்கள் நன்றாக ரசித்து வருகின்றனர். முதல் முறையாக இணைந்துள்ள விஜய் - நெல்சன் கூட்டணி குறித்தும், ரசிகர்கள் பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
பீஸ்ட் படத்திற்கு வெளிநாட்டு ரசிகர்கள்
இந்நிலையில், பிரபல தமிழ் திரைக்கதை ஆசிரியர் ஒருவர், வெளிநாட்டைச் சேர்ந்த சிலருடன் பீஸ்ட் படம் பார்த்த போது, அவர்கள் கூறிய விஷயத்தை பகிர்ந்துள்ளது, தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. ஆனந்த் ஷங்கர் இயக்கிய நோட்டா, எனிமி திரைப்படங்களின் திரைக்கதை, வசன பகுதிகளில் பணிபுரிந்தவரும், சுதா கொங்கரா இயக்கிய தங்கம் (பாவ கதைகளின் ஒரு பாகம்) கதை எழுதியவருமானவர் எழுத்தாளர் ஷான் கருப்பசாமி.
இவர் தன்னுடைய பேஸ்புக் பதிவில், "பீஸ்ட் படத்தை எங்கள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் (CEO, CPO, COO) யூடாவில் உள்ள ஜோர்டான் என்னும் இடத்தில் பார்த்தேன். தியேட்டரில் அவர்கள் மூன்று பேரை தவிர அனைவரும் தமிழர்கள் தான். இதுவரை தமிழ் படங்களே பார்த்திராத அவர்கள் மூவரும் பீஸ்ட் படத்தை வெகுவாக ரசித்தார்கள். இனிமேல் விஜய் நடித்த படங்களை தேடி பார்ப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள். அதே போல அனிருத் இசையையும்" என தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ஷான் கருப்பசாமி குறிப்பிட்டுள்ளார்.
அதே போல அவர் இணைத்துள்ள வீடியோ ஒன்றில் பேசும் அந்த மூன்று வெளிநாட்டவரும், "பீஸ்ட் படம் மிகவும் அற்புதமாக இருந்தது. படத்தின் ஆக்ஷன், இசை என அனைத்தும் சிறப்பாக அமைந்திருந்தது. விஜய்யை பார்க்கவே ஆச்சரியமாக இருந்தது" என குறிப்பிட்டுள்ளனர்.