சென்னை: நடிகர் சத்யராஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அடுத்தடுத்து திரைபிரபலங்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருவது கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா 3ஆம் அலை
இந்தியாவில் கொரோனா 3-வது அலையின் தீவிரம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்துக்கும் அதிகமாகவே உள்ளது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தப் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசிப் போட்டுக் கொள்ளுமாறு தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. அதேநேரம் கொரோனாவின் 3 அலையில் பரவும் ஒமைக்கரான் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. சென்னையில் தினசரி பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்துள்ளது.
பாதிக்கப்பட்ட திரைப்பிரபலங்கள்
பொதுமக்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அருண் விஜய், விக்ரம், இசையமைப்பாளர் தமன், நடிகர் அர்ஜுன், கமல்ஹாசன், மீனா, த்ரிஷா, மகேஷ் பாபு உள்பட பல திரை பிரபலங்களுக்கு கொரோனா பாதித்து வீட்டு தனிமையில் இருக்கிறார். சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இசையமைப்பாளர் தமன்.. அவரே சொன்ன தகவல்!
பிரபல இயக்குநர் பிரியதர்ஷனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் சத்யராஜ்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சோதனை செய்து பார்த்ததில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது உறுதியானது. தற்போது அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் எதையும் மருத்துவமனை நிர்வாகம் இன்னும் வெளியிடவில்லை.
தடுப்பூசி
சத்யராஜ் கடந்த 2வது அலையின் போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதுடன், தடுப்பூசி போடச் சொல்லி மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். அப்போது அவர் வெளியிட்ட வீடியோவில் உருக்கமான வேண்டுகோள் விடுத்திருந்தார். அதில் பேசிய விஷயங்கள் இப்போதைய 3வது அலைக்கும் பொருந்தும் என்பதால், அதை அப்படியே பார்ப்போம். " சமீபமாக சில வேதனையான விஷயங்களைக் கேள்விப்படுகிறேன். யாருமே சரியாகத் தடுப்பூசிப் போட்டுக் கொள்வதில்லை. செல்போன் வந்த பிறகு நமக்கு நாமே மருத்துவர் ஆகிவிட்டோம்.
முதல்ல சிம்பு, அடுத்து ஹரிஷ் கல்யாண்... அடுத்தடுத்து இரண்டு படத்தில் கமிட் ஆன இளம் நடிகை!
அக்கம்பக்கத்தினர், சொந்தக்காரர்கள், நண்பர்கள் என அனைவருமே மருத்துவர்கள். அது எப்படி?. மருத்துவத்துக்குப் படித்தவர்கள்தான் மருத்துவராக இருக்க முடியும். அதனால் தடுப்பூசி பற்றி ஏதேனும் குழப்பம் இருந்தால், தெரிந்த மருத்துவரை அணுகுங்கள். அவர்கள் சரியான அறிவுரை வழங்குவார்கள். நம்ம உடம்புக்கு ஒன்றும் வராது என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு, இது சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட உடம்பு என்பது எல்லாம் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனாலும், நம்மை விட மருத்துவர்களுக்கு நமது உடம்பைப் பற்றி நன்றாகத் தெரியும்.
அதற்குத்தான் அவர்கள் மருத்துவத்துக்குப் படித்துள்ளார்கள். நான் சொல்வதைக் கூடக் கேட்காதீர்கள். நான் என்ன மருத்துவரா?சமீபத்தில் கேட்கும் விஷயம் எல்லாம் மனவேதனையைத் தருகிறது. முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி, கிருமி நாசினி மூலம் கையைச் சுத்தப்படுத்துவது எல்லாம் அனைவரும் செய்கிறார்கள். ஆனால், இந்தத் தடுப்பூசி விஷயத்தில் பெரிய குழப்பம் இருக்கிறது. தயவுசெய்து மருத்துவர்களை அணுகி அறிவுரை பெற்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்" இவ்வாறாக சத்யராஜ் தடுப்பூசி விழிப்புணர்வு குறித்து கூறியிருந்தார். தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனா வருகிறது என்றாலும், தடுப்பூசி போடதவர்களைவிட குறைவான பாதிப்பையே எதிர்கொள்வதாக மருத்துவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.