இந்திய சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் பரதன்.
இவர் தமிழில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் 1992 ஆம் ஆண்டு வெளியான தேவர் மகன் படத்தின் இயக்குனர் ஆவார். இவருடைய மனைவி 73 வயதான நடிகை KPAC லலிதா. தமிழில் தல அஜித்துடன் 'கிரீடம்', தளபதி விஜயுடன் 'காதலுக்கு மரியாதை', மணிரத்னம் இயக்கத்தில் 'காற்று வெளியிடை' & ‘அலைபாயுதே', ஜீவா இயக்கத்தில் 'உள்ளம் கேட்குமே' உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
கேரளாவை சார்ந்த இவர் 300க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். கே.பி.ஏ.சி.லலிதா கல்லீரல் செயலிழப்பு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதால், கல்லீரல் தானம் கேட்டு அவரது மகள் ஸ்ரீகுட்டி சமூக வலைத்தளம் மூலம் பதிவிட்டு இருந்தார்.
இந்த பதிவை பார்த்த நடிகை KPAC லலிதாவின் ரசிகரும், கேரள நாடகக் கலைஞர்கள் சங்க நிர்வாகியுமான, 54 வயது நிரம்பிய கலாபவன் சோபி என்பவர் கல்லீரல் தானம் செய்ய முன்வந்துள்ளார். நடிகை லலிதாவுக்கும், இவருக்கும் ஒரே குரூப் ரத்தம் என்பதும் மேலும் இவர் மது, புகைப்பழக்கம் இல்லாதவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த செயல் கேரள திரைத்துறையினரிடமும், கேரள பொதுமைச்சமூகத்திடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவரது அனைத்து மருத்துவச் செலவையும் ஏற்றுக்கொள்வதாக சில தினங்களுக்கு முன் கேரள அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.