1994- ஆம் ஆண்டு பாக்யராஜின் 'வீட்ல விசேஷங்க' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரகதி. தமிழில் ஒரு சில படங்களில் நடித்தவர், அதன் பின்பு மலையாளத்திலும் ஒரு படத்தில் நடித்தார். அதற்குப் பின்பு திருமணம் செய்துகொண்டு சிலகாலம் சினிமாவிற்கு முழுக்கு போட்டவர், ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த 'ஜெயம்' படத்தில் சுதாவிற்கு அம்மாவாக நடித்தார். இதுவரை தெலுங்கு மற்றும் தமிழில் 120-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அது மட்டும் அல்லாது இரு முறை நந்தி விருதும் பெற்றுள்ளார். தற்போது அரண்மனை கிளி சீரியலில் ஹீரோவுக்கு தாயாக நடித்து வருகிறார். இவரது நடிப்பு அந்த சீரியலில் மிகவும் பிரபலம்.
இந்நிலையில் சீரியல்களில் அமைதியாக நடிக்கும் பிரகதி நிஜத்தில் மிகவும் வீரமான பெண்ணாக இருக்கிறார். அதிலும் முக்கியமாக பிட்னஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது ஜிம்மில் கடினமான உடற்பயிற்சிகளை செய்யும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது அவரது வழக்கம். இப்போது அவருக்கு வயது 44. சமீபத்தில் கூட அவர் தனது மகனுடன் சேர்ந்து ஒரு டான்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். மாஸ்டர் படத்தில் வரும் 'வாத்தி கம்மிங் ஒத்தே' பாடலுக்கு இருவரும் நடனம் ஆடிய வீடியோ வைரலானது. இந்நிலையில் தற்போது சேலை கட்டிக்கொண்டு புல்லட் பைக் ஓட்டும் வீடியோவை அவர் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் 40 வயதிலும் இப்படி அசாத்தியமான துணிச்சலும் திறமையும் இருக்கிறதே என்று வியந்து அவரை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.