இந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகரான மோகன்லால், மலையாள சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர்.
அவரின் மகன் பிரணவ் மோகன்லால், தமிழில் கமல் நடித்து வெளியான ’பாபநாசம்’ படத்தில் இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் ஜீத்து ஜோசப் இயக்கிய ’ஆதி’ படத்தில் மலையாள சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.
இந்நிலையில் பிரணவ் மோகன்லால், கடலில் சிக்கிய நாயை மீட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இரண்டு நிமிட நீள அந்த வீடியோவில் பிரணவ் கடலின் நடுவில் இருந்து நீந்திக் கரையை நெருங்கும் போது, அவர் கையில் ஒரு நாய் இருப்பதை காணலாம். கரையில் காத்திருக்கும் நண்பர்களை நோக்கி பிரணவ் நீந்தி நாயை பத்திரமாக கடற்கரைக்குக் கொண்டுவருகிறார். மீட்கப்பட்ட தெருநாயை மற்ற நாய்களுடன் விட்டுவிட்டு எதுவும் நடக்காதது போல் பிரணவ் விலகி செல்வதையும் காணலாம்.
கடந்த ஊரடங்கின் போது இந்த சம்பவம் சென்னையில் நடந்ததாக அறியப்படுகிறது. சென்னையில் உள்ள மோகன்லாலின் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. நாயைக் காப்பாற்றிய பிரணவின் தைரியத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.