மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் பகத் ஃபாசில். ஒவ்வொரு படத்திலும் மிக மிக வித்தியாசமான கதைக்களம் மற்றும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுக்கும் பகத் ஃபாசில், கடந்த ஜூன் மாதம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' படத்திலும் நடித்திருந்தார்.
Also Read | 'விக்ரம்' படத்தை ஏன் தியேட்டர்ல போய் பாக்கல? அல்போன்ஸ் புத்திரன் சொன்ன காரணம்!
இதில், பகத் ஃபாசிலின் அசாத்திய நடிப்பு, மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, பகத் ஃபாசில் மலையாளத்தில் நடித்துள்ள 'மலையன்குஞ்சு' திரைப்படம் வெளியாக உள்ளது.
ஜூலை மாதம் 22 ஆம் தேதி, மலையன்குஞ்சு திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தினை சஜிமோன் பிரபாகர் இயக்கி உள்ளார். மாலிக் படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன், மலையன்குஞ்சு படத்தின் திரைக்கதையை எழுதி, ஒளிப்பதிவும் செய்துள்ளார். பகத் ஃபாசிலின் தந்தை ஃபாசில் தயாரித்துள்ள இந்த படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
பகத் ஃபாசிலுடன், ரஜிஷா விஜயன், இந்திரன்ஸ், ஜாஃபர் இடுக்கி உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் பல மாதங்களுக்கு முன்பு வெளியாகி இருந்த நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்நிலையில், மலையன்குஞ்சு திரைப்படத்தில் இருந்து, தற்போது முதல் சிங்கிளும் வெளியாகி உள்ளது.
ரோஜாவுக்கு பிறகு, கடந்த 1992 ஆம் ஆண்டு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த படம் 'யோதா'. மோகன்லால் நடிப்பில், மலையாளத்தில் வெளியாகி இருந்த இந்த திரைப்படத்திற்கு பின்னர், எந்த மலையாள படத்திற்கும் இசையமைக்காமல் இருந்து வந்தார் ஏ.ஆர். ரஹ்மான். இதனைத் தொடர்ந்து, தற்போது 'மலையன்குஞ்சு' மற்றும் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகி வரும் 'ஆடுஜீவிதம்' உள்ளிட்ட மலையாள படங்களின் இசையமைப்பாளராக ரஹ்மான் பணியாற்றி வருகிறார்.
இதில், மலையன்குஞ்சு படத்தில் இருந்து பாடல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் பாடியுள்ள 'சோலப்பெண்ணே' என்னும் பாடல், இன்று (12.07.2022) வெளியானது முதல் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. அதே போல, சுமார் 30 வருடங்களுக்கு பிறகு, ரஹ்மான் இசையில் மலையாள பாடல் வெளிவந்துள்ளதால், அதனையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Also Read | ஜான்வி கபூர் நடிக்கும் கோலமாவு கோகிலா இந்தி ரீமேக்.. வெளியான டெரர்ரான போஸ்டர்!