90களில் பிரபலமான சீரியல் நடிகையாக இருந்தவர் நடிகை புவனேஸ்வரி. இவர் பிஹைண்ட்வுட்ஸ் youtube தளத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்திருக்கிறார்.
இதில், புவனேஸ்வரி தம்முடைய திரைவாழ்க்கை கடந்து வந்த பாதை குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில், “எனக்கு சினிமாவில் வரும் ஆர்வமும் ஆவலும் இல்லாமல் இருந்தது. ஆனால் என் அம்மாதான் சொன்னார், நம் குடும்பத்தில் யாரும் சினிமாவில் நடித்ததில்லை. நீ நடிக்கலாமே என்றார். சரி. சீரியல்தானே.. என்று அம்மாவின் வலியுறுத்தலால் நடிக்க போனேன்.
அதன் பிறகு சீரியல்களில் நடிக்கத் தொடங்கினேன். எனக்கு நடிக்கவும் தெரியாது. ஆனால் 2, 3 சீரியல்களில் வாய்ப்பு வந்தது. பின்னர் நான் நடித்த முதல் படமே ஷங்கர் சாரின் பாய்ஸ் படம். எனக்கு கிடைத்த முதல் திரைப்படமே பாய்ஸ் தான். அதுவும் பெரிய திரைப்படம், பெரிய அறிமுகம். இரண்டு மூன்று சீரியல்கள் நடித்திருந்த எனக்கு சங்கர் சார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பெரிய விஷயமாக இருந்தது அவரை பார்க்கும் போதே பிரம்மாண்டமாக இருந்தது.” என பகிர்ந்தார். மேலும் அதன் பிறகு தனக்கு நிறைய தெலுங்கு படங்களில் வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறினார்.
அதே சமயம், தான் சீரியலில் சந்தித்த பிரச்சனைகள் குறித்து பேசும்போது, “நான் சீரியலில் நுழைந்தபோது எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் கஷ்டப்படாமலே சீரியலுக்குள் நுழைஞ்சேன். சீரியலில் நடிக்க தொடங்கிய உடனே அடுத்தடுத்த சீரியல்கள் புக் ஆனது. சினிமாவிற்குள் வரும்போது பலரும் கஷ்டப்பட்டதாக சொல்வார்கள். நான் அப்படி வரவில்லை. ஆனால் சீரியலுக்குள் வந்த பிறகு தான் பெண்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் எல்லாம் இருக்கிறது என்பதை பார்த்தேன். நானும் நிறைய பிரச்சனைகளை சந்தித்தேன்.
எல்லா பத்திரிகை நண்பர்களுக்கும் தெரியும், அதை நான் சொல்ல வேண்டும் என்றில்லை. எல்லா துறையிலும் பெண்களுக்கு பிரச்சனை உண்டு. ஆனால் சினிமாவில் இருக்கும் பெண்கள் பிரச்சனைக்குள்ளாக்கப்படும்போது அது அவர்களுக்கு பிளாக் மார்க் ஆகிவிடுகிறது. ஆனால் அம்மாவுக்கு இந்த விஷயங்கள் புரியவில்லை.
அம்மா மிகவும் வேதனை அடைந்தார்கள். எல்லாருக்கும் இல்லை என்றாலு சில பெண்களுக்கு பிரச்சனைகள் இருப்பதை புரிந்துகொண்டேன். நானும் ஒரு பெண் தான். எனக்கு அப்பா கிடையாது. என் அம்மா, என் ஃபேமிலி அனைவருக்குமே நான் மட்டும்தான். ஆனாலும் என் குடும்பத்தினரின் துணையோடு சில பிரச்சனைகளில் இருந்து வெளியேற முடிந்தது. ”