Illayaraja: தமிழ் திரைத் துறையை மட்டுமல்லாமல் தென்னிந்திய, இந்தியத் திரைத் துறையில் தம்முடைய இசையால் 40 வருடங்கள் ரசிகர்களை கட்டிப்போட்டவர் இசைஞானி இளையராஜா.
இசைஞானி இளையராஜா
70-கள் மற்றும் 80-களில் இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் மிகவும் பிரபலமாகி பட்டிதொட்டியெங்கும் சென்றடைந்தன. ஆனால் இன்று வரை இளையராஜாவின் பாடல்களுக்கான தாக்கம் குறையாமல் மக்களிடையே பரவலாக கேட்கப்பட்டு வரும் பொது பாடல்களாகவே அவை நீடித்து வருகின்றன.
மேஸ்ட்ரோ
வளரும் இசையமைப்பாளர்கள் முதல் வளர்ந்த இசையமைப்பாளர்கள் வரை பலரும் இசைஞானி இளையராஜாவின் இசையை மெச்சிக்கொள்ளாதவர்கள் இல்லை என்று சொல்லலாம். பலரும் இளையராஜாவை மேஸ்ட்ரோ என்று குறிப்பிடுவது வழக்கமான ஒன்று. பல்வேறு மொழிகளில் இசையமைத்த இளையராஜாவின் பாடல்கள் இசையுலகில் நீங்கா புகழ் பெற்று விளங்குபவை.
பண்டிகைகளிலும் ராஜா
கர்நாடக சங்கீதம், மேற்கத்திய இசை, சிம்பொனி, கிராமிய பாடல்கள் என இசையில் பல அற்புதங்களையும் ஆராய்ச்சிகளையும் இளையராஜாவின் பாடல்கள் நிகழ்த்திக் காட்டியுள்ளன. இவ்வளவு ஏன், புதுவருடம் வந்தால் ‘இளமை இதோ இதோ’, பொங்கல் வந்தால், ‘தை பொங்குது பொங்குது பாலு பொங்குது’ என ராஜாவின் பாடல்கள் இல்லாத பண்டிகைகள் இல்லை. ஓடும் பேருந்துகள் எங்கும் ராஜாவின் பாடல்கள் ஓடும்.
விண்வெளியில் ராஜாவின் பாடலா?
இப்படி பெருவாரியான ரசிகர்களால் அனுபவித்து கேட்கப்படும் இத்தகைய இசைஞானி இளையராஜாவின் இசை பற்றிய ஒரு செய்தி தற்போது வெளிவந்தது.ஆம், அமெரிக்காவின் புகழ்பெற்ற விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் உதவியுடன், இஸ்ரோவில் இருந்து விண்ணில் ஏவப்படவிருக்கும் எடை குறைவான சாட்டிலைட் மூலம் இசைஞானி இளையராஜாவின் பாடல் விண்வெளியில் ஒலிக்கவிருப்பதாக தகவல்கள் கூறப்பட்டு வந்தன.
மேலும் சாட்டிலைட்டை தயாரிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு குழு இதனுடன் இளையராஜாவின் பாடல் ஒன்றை சேர்க்க நினைத்து, அதன் நிமித்தமாக அவரிடம் பேசி ஒப்புதல் வாங்கியதாகவும் கூறப்பட்டது.
உண்மை என்ன?
ஆனால் இதுபற்றி இசைஞானி தரப்பில் நாம் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, ‘இப்படி ஒரு விசயம் கூறப்பட்டு வருகிறது. ஆனால் இதுபற்றி இசைஞானி இளையராஜாவுக்கே தெரியாது! இதுபற்றிய தகவல்கள் தெரியவந்தால் தெரியப்படுத்துகிறோம்’ என்று கூறியிருக்கின்றனர். எது எப்படியோ.. ராஜா சார் பாடலை கேட்டாலே நாம் விண்வெளிக்கு போய்விடலாம்.