திரைத்துறையில் மற்றுமொரு பழம்பெரும் பிரபலம் காலமாகியுள்ள சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகரும், பிரபல டப்பிங் யூனியனின் முன்னாள் தலைவருமான ஆர்.வீரமணி தான் தற்போது கொரோனாவால் காலமாகியுள்ளார்.
தமிழில் தங்கமான ராசா, பொண்ணு வீட்டுக்காரன், பத்ரகாளி, சின்ன பூவே உள்ளிட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்திருந்த வீரமணிக்கு 60 வயது. குறிப்பாக நடிகர் வீரமணி, பழம்பெரும் நடிகரும் நகைச்சுவை சக்ர்வர்த்தியுமான நடிகர் நாகேஷுக்கு டூப்பாக பல படங்களில் நடித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன.
எம்.ஆர்.ராதாவின் நாடக குழுவில் இருந்த வீரமணியை எம்.ஆர்.ராதாவே சினிமாவுக்கு அழைத்து வர, தமிழ் படங்களில் நடித்துக்கொண்டு தெலுங்கு படங்களுக்கு டப்பிங் கலைஞராக பணிபுரிந்த வீரமணி, பின்னர் டப்பிங் யூனியன் தலைவராகவும், நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் சில காலம் இருந்து வயது மூப்பின் காரணமாக சினிமா உலகை விட்டு பின்னர் விலகி இருந்தார்.
இவரது மனைவி நாகரத்தினம், மகள்கள் சண்முகப்பிரி்யா, பவித்ரா, கவிதா ஆகியோருடன் சென்னை நெசப்பாக்கத்தில் வசித்து வந்தார். நேற்று அதிகாலையில் மூச்சுத்திணறல் அதிகமாக இருந்ததால் வீரமணி அவர்கள், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில்,சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். வீரமணி அவர்களின் மறைவுக்கு டப்பிங் கலைஞர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
இவர் பற்றி பழம்பெரும் பாடலாசிரியர் கண்ணதாசனின் மகன் கோபி கண்ணதாசன் தமது சமூக வலைப்பக்கத்தில் குறிப்பிடும்போது, “வீரமணி 1960களில் பட்டர் பிஸ்கட் விற்பதற்கு எங்கள் வீட்டிற்கு வருவார்... பலர் அவரை பார்ப்பதற்கு நாகேஷ் போல் இருக்கிறாய் என்று உசுப்பி விட, வீரமணிக்கு நடிப்பாசை தொற்றிக்கொண்டது.. அம்மாவிடம் கேட்டு, அம்மா அப்பாவிடம் சிபாரிசு செய்ய, வீரமணியின் சினிமா வாழ்க்கை இனிதே தொடங்கிற்று. முதல் படத்திலேயே புரட்சித் தலைவருக்கு தபால் தரும் வேஷம்.. ஐயா..தபால்.. இதுதான் பேச வேண்டிய வசனம்.. யூனிட்டில் எல்லோரும் "சின்னவருடன் சீனா..? ஒழுங்கா செய்யு" என்றெல்லாம் கிண்டலுக்கு பயமுறுத்த , பயத்தில் ... ஐயா.. பதால் என்றார் வீரமணி.. மூன்று டேக் பார்த்துவிட்டு ஆளை மாற்றிவிட்டார் இயக்குநர்.
பின்னர் சினிமா வட்டாரத்தில் சுற்றி வந்து டப்பிங் ஏஜெண்டாக உருவெடுத்தார் வீரமணி. டப்பிங் யூனியனில் முக்கிய நபராகவும், ராதா ரவிக்கு வலது கரமாகவும் திகழ்ந்தார். சினிமாவில் கணிசமாக சம்பாதித்து தன மகள்களுக்கு திருமணமும் செய்து முடித்து தாத்தாவானார். இன்று கொரோனா அவரை விழுங்கிக்கொண்டது. ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்!” என குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ: லாக்டவுனில் பிக்பாஸ் ஷுட்டிங்!!.. சென்னையில் அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு!