கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் மேகா ஆகாஷ் நடித்துள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா. விஜய் சேதுபதி, அஞ்சலி நடிப்பில் உருவாகி உள்ள படம் சிந்துபாத். இந்த இரண்டு படங்களையும் விநியோகிக்கும் உரிமத்தை கே புரொக்ஷன் என்ற நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த நிறுவனம் பாகுபலி படத்தை வெளியிட்ட வகையில் தங்களுக்கு 17 கோடி ரூபாய் தர வேண்டும் என்றும், தரும் வரை இரு படங்களையும் வெளியிட தடைகேட்டு ஐதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், நீதிமன்றம் தடை விதித்திருப்பதாகவும் பாகுபலி தயரிப்பு நிறுவனமான அர்கா மீடியா ஒர்க்ஸ் அறிக்கை வெளியிட்டது. தற்போது இது தவறான தகவல் என்று கே.புரொடக்ஷன் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
அர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் எங்களுக்கு, தீங்கு இழைக்கும் நோக்கில் கே புரொடக்ஷன் மற்றும் இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் மீது வியாபார ரீதியில் பரப்பியுள்ள தவறான குற்றச்சாட்டுக்களுக்கு நங்கள் எங்கள் நிறுவனம் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் சொல்லும் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது.
அர்கா மீடியா ஒர்க்ஸ் சார்பில் எங்களுக்கு எதிராக நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் 04.05.2019 அன்று ஐதராபாத் நகர சிவில் நீதிமன்ற 24 வது கூடுதல் தலைமை நீதிபதி மற்றும் வணிக நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் எங்களுக்கு எதிராக எந்த தடையும் இல்லை என்று அறிவித்துள்ளது. நாங்கள் அர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்திற்கு எந்த வித பணமும் செலுத்த தேவையில்லை.
அவர்கள் தான் எங்கள் நிறுவனத்திற்கு பல கோடிகள் தர வேண்டியுள்ளது. நாங்கள் சட்ட ரீதியாக எங்கள் பணத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க உள்ளோம். இதன் மூலமாக அனைவரிடமும் நாங்கள் கேட்டுக்கொள்வது என்வென்றால் தவறான செய்தியை யாரும் பின்பற்ற வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.