சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. இந்த படத்தின் 4வது சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதிபாபு, வேல ராமமூர்த்தி, பாண்டியராஜன், லிவிங்ஸ்டன் நடிக்கும் இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றியும், கலை இயக்குனராக மிலனும், இசையமைப்பாளராக இமானும், எடிட்டராக ரூபனும் பணிபுரிகின்றனர்.
முன்ந்தாக விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு அண்ணாத்த படத்தின் முதல் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றதுடன், ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினி பெயர் கணேசன் என்றும், படத்திற்கு U/A தணிக்கை சான்றிதழ் வழங்கப் பட்டுள்ளதாகவும், படத்தின் நீளம் 2 மணிநேரம் 43 நிமிடங்கள் என்றும் தகவல்கள் கிடைத்திருந்தன.
இதனைத் தொடர்ந்து அண்ணாத்த படத்தின் மூன்று பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி ஹிட் அடித்தன. தற்போது டி.இமான் இசையில் அண்ணாத்த’ படத்தின் 4-வது சிங்கிள் பாடலான ‘வா சாமி..’ பாடல் வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் அருண் பாரதி பாடலை எழுதியுள்ளார். ஏற்கனவே சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித்குமார் நடித்த விஸ்வாசம் திரைப்படத்தில் பாடல் எழுதியுள்ளார்.
இந்நிலையில் பாடலாசிரியர் அருண் பாரதியின் மனைவியும் பிரபல சீரியல்களான ரோஜா, புத்துப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட சீரியல்களின் வசனம் மற்றும் திரைக்கதைகளை எழுதும் எழுத்தாளருமான பத்மாவதி, “வா சாமி” பாடல் உருவான எமோஷனல் பின்னணி குறித்து தமது சமூக வலைதளத்தில் உருக்கமாக எழுதியுள்ளார்.
அதில், “பத்து வருடங்களாக பாடல் எழுத வேண்டும் என்று போராடி விஜய் ஆண்டனி அவர்களின் அண்ணாதுரை தொடங்கி இன்று அண்ணாத்த வரை இந்த உயரத்தை அடைந்து இருக்கிறாய். கொரொனா காலகட்டம் ஒரு பக்கம் கை குழந்தை கவனிக்க ஆள் இல்லாமல் நாம் இருவர் மட்டும் வீட்டில் இருந்தோம். வளைக்காப்பு நடக்காமல் போனது. ஹாஸ்பிட்டலில் அட்டென்டர் கூட கிடையாது. குழந்தையை குளிக்க வைக்க, சாப்பாடு ஊட்ட, என்று எல்லாமே நீ செய்து இருக்கிறாய். எனது அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது.
ஒரு பக்கம் கை குழந்தைக்கு மருந்து கொடுத்துக் கொண்டு, அழும் குழந்தையை சமாதானம் செய்து கொண்டு, இன்னொரு பக்கம், எனது சீரியல் வேலைகளுக்கு உதவி செய்து கொண்டு, இன்னொரு பக்கம் எனது அம்மாவின் உடல் நிலையை பார்த்துக் கொள்ள வேண்டிய சூழலில் எனக்கு மன தைரியம் சொல்லிக் கொண்டுதான் இந்த பாடலை நீ எழுதினாய் என்பது எனக்கு மட்டுந்தான் தெரியும். வாழ்த்துக்கள் அருண்பாராதி பட்ட கஷ்டம் வீண் போகாது.
இந்த வா சாமி !!! நாம் குலசாமியான, நமது குழந்தை அகிலுக்கு சமர்ப்பிக்கிறேன். விஸ்வாசத்தை அடுத்து இந்த படத்திலும் வாய்ப்பு கொடுத்த சிவா சார் அவர்களின் அன்புக்கும், இமான் சார் அவர்களின் கனிவுக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் இல்லை. வாழ்த்துக்கள் வா சாமி !!” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாத்த படம், வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 அன்று திரைக்கு வருவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. நவம்பர் 1-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.