தமிழகத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய யூடியூப் பிரபலம் மதன் கௌரி.
இணையவாசிகளின் பல்வேறுவிதமான கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விளக்கம் சொல்லி வந்த மதன் கௌரி, தான் சொல்லும் தகவல்களை தனக்கே உரிய பாணியில் எளிமையாகவும் வலிமையாகவும் கடத்துவதில் வல்லவர்.
இந்த நிலையில்தான் மதன் கௌரி, பிரபல ‘டெஸ்லா’ கார் கம்பெனி அதிபர் எலான் மஸ்க் அவர்களிடம், “இந்தியாவில் மின்சார வாகனங்கள் உற்பத்தி எப்போது தொடங்கப்படும்?” என்றும் “மின்சார வாகன இறக்குமதி எப்போது நடக்கும்?” என்றும் ட்விட்டரில் கேள்வி கேட்டிருக்கிறார்.
இதற்கு ட்விட்டரிலேயே பதிலளித்த எலான் மஸ்க், “இந்தியாவில் அதிக இறக்குமதி வரி விதிக்கப் படுவதால், மின்சார வாகன இறக்குமதி என்பது சற்றே தாமதம் ஆகிறது.
அத்துடன் இந்தியாவின் பருவநிலை ஒப்பந்தத்திற்கு மின்சார வாகனங்கள் என்பது சற்றே பொருந்தாத ஒன்றாகவே இருப்பதாக கருதப்படுகிறது. எனினும் இந்தியாவில் மின்சார வாகன உற்பத்திக்கு தற்காலிக வரிச்சலுகை அளிக்கப்பட்டால், உடனடியாக மின்சார வாகன உற்பத்தி இந்தியாவில் தொடங்கப்படும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழகத்தைச் சேர்ந்த ஒரு ‘தனிநபர்’ யூடியூப் பிரபலம், ட்விட்டரில் கேட்ட இந்த கேள்விக்கு, உலக அளவில் நவீன தொழில்நுட்பங்களின் மிக முக்கியமான முகமாக விளங்கும் எலான் மஸ்க் பதிலளித்துள்ள நிகழ்வு வைரலாகி வருகிறது.