சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு ஆட்டோ சின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆதரவுடன் முதன் முறையாக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். எந்தவித கட்சி சார்பு இல்லாமல் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 169 இடங்களில் போட்டியிட்டனர். இதில், போட்டியின்றி 13 பேர், போட்டியிட்டு 102 பேர் என மொத்தம் 115 பேர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற பிரதிநிதிகளை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்தும் தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் பிப்.19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. பிப்.22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. 12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மொத்தம் 1,298 பதவியிடங்களுக்கு மார்ச் 4-ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலைத் தொடர்ந்து தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட உள்ளனர். தேர்தலில் போட்டியிடுபவர்கள் விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியையும், விஜய்யின் படங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருந்தார். மேலும், விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.
இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான அந்தக் கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைச் சந்திப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆட்டோ சின்னத்தை ஒதுக்குமாறு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாநில தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால், தேர்தல் ஆணையத்தில் கட்சியையோ அல்லது அமைப்பையோ பதிவு செய்திருந்தால் மட்டுமே ஒதுக்க முடியும் என கூறி ஆட்டோ சின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருமாறு ரசிகர்கள் நீண்ட காலமாக கூறி வருகின்றனர். ஆனால் விஜையோ அவசரப்படாமல் அமைதி காத்து வருகிறார். அதிலும், அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் அதில் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது எஸ்ஏசியின் விருப்பமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.