நடிகர் கார்த்தி நடிப்பில் 'சர்தார்' படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்கியுள்ளார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைபயிற்சி இயக்குனராக பணியாற்றியுள்ளார். கலை இயக்குனராக கதிர் பணியாற்ற, பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.
Also Read | Bigg boss 6 tamil : “கமல் சார் குறும்படத்த போடட்டும்.. நான் பிக்பாஸ விட்டே போறேன்!”- தனலட்சுமி ஆவேசம்
இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ரஜிஷா விஜயனும் நடித்துள்ளனர். நடிகை லைலா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சர்தார் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொண்ட அப்படக் குழுவினர்கள் இதுகுறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
இப்படம் குறித்து எடிட்டர் ரூபன் பேசும்போது, “பொதுவாக ஒருவர் நன்றாக பேசினால் வாயால் வடை சுடுவார் என்று கூறுவோம். ஆனால், மித்ரன் வாயால் பிரியாணி செய்வார். சண்டைக் காட்சிகளை கூறும்போது, உண்மையாகவே அடித்து விடுவாரா? என்ற பயம் வரும். ஆனால், கதை கூறுவதற்கும் அதை காட்சிப் படுத்துவதற்கும் வித்தியாசம் இருக்கும். வாயால் கூறுவதை படமாக்குவது சவாலான விஷயம். ஆனால், மித்ரன் சொன்னதுபோலவே சிறப்பாக காட்சிப்படுத்தியிருந்தார். அதேபோல கதை கேட்கும்போது கார்த்தி சார் நிறைய கேள்விகள் கேட்பார். இப்படத்திலும் நிறைய கேள்விகள் கேட்டார். இறுதியில் அவர் ஒப்புக் கொண்டதும் இப்படம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.
மேக்கப் மேன் ஒரு நாள் என்னைத் தொடர்பு கொண்டு சர்தார் வேடத்தின் தொடர்ச்சி சரியாக உள்ளதா? என்று கேட்டார். இதுவரை யாரும் அப்படி கேட்டதில்லை. அதிலிருந்தே அவரின் ஈடுபாடு தெரிந்தது. அதன்பிறகு, எனக்கும் இப்படத்தை மிகச் சிறப்பாக கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் உதவியாளர்களும் இரவு பகல் பாராமல் கடினமாக உழைத்தார்கள். ஒவ்வொருவரும் எது சரி, எது தவறு என்று எடுத்துக் கூறி இப்படம் நன்றாக வருவதற்கு உறுதுணையாக இருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.
இதேபோல் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் பேசும்போது, “இப்படத்தில் யாரும் சந்தோஷமாக வேலை பார்க்க முடியாது என்று லக்ஷ்மன் சாரிடம் கதை கூறும்போதே தெரியும். இப்படம் கதையிலிருந்து திரைக்கதையாக்கும்போதிருந்தே கடினமாகத்தான் இருந்தது. கதை ஆக்குவதிலிருந்து சரியாக வருவதற்கு எழுத்தாளர்கள் மிகவும் உழைத்திருக்கிறார்கள். மேலும், இக்கதை கோர்வையாக வருவதற்கு ஜிவி உதவிபுரிந்தார். ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு எழுத்தாளர், இந்த பட கதையை பற்றி சொல்லும் போது.. ஒரு மெத்தையில் இருக்கும் பஞ்சை தலையணைக்குள் கொண்டு வந்துவிட்டீர்கள் என்று கூறினார். அனைத்து கோணத்திலும் மிகப் பெரிய உழைப்பு இருந்தது. எல்லோருக்கும் எளிமையாக புரிய வேண்டும். கதை தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்கு அதிக உழைப்பு தேவைப்பட்டது. உங்கள் பெயரை மித்ரன் என்பதற்கு பதிலாக மாத்ரன் என்று வைத்துக் கொள்ளுங்கள் என்று ரூபன் கூறினார். அந்தளவிற்கு திரைக்கதையை மாற்றிக் கொண்டே இருப்பேன். படப்பிடிப்பிற்கு 60 நாள் வேண்டுமென்றால், தளம் அமைப்பதற்கு 120 நாட்கள் ஆகும். அதை கலை இயக்குனர் கதிர் சிறப்பாக செய்தார்.
கார்த்தி சார்.. மேக்கப் போடுவதிலிருந்து படப்பிடிப்பு தளத்திற்கு வருவது வரை அவருடைய ஈடுபாட்டை பார்த்து மிரண்டு போனேன். அவரின் கடின உழைப்பு இப்படத்தை இன்னும் சிறப்பாக கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. ஒரு பாடலுக்கு 7 மணி நேரம் செலவழித்து இப்பாடலை நானே பாடினால் தான் நன்றாக இருக்கும் என்று பாடினார். அவரின் அர்ப்பணிப்பு தான் இப்படம் நன்றாக வருவதற்கு முக்கிய காரணம்” என்றார்.
Also Read | Sardar : "இப்படி ஒருத்தர் வெளியே தெரியாமலே இருந்துருக்காரு".. சர்தார் விழாவில் கார்த்தி.!