வாரிசு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின், அர்ஜூன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். லியோ படத்திற்காக நான்காவது முறையாக நடிகர் விஜய்யுடன் இசையமைப்பாளர் அனிருத் கைகோர்த்துள்ளார்.
இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள். லியோ படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் S. லலித்குமார் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி துவங்கிய சூழலில் தற்போது காஷ்மீரில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் லியோ படப்பிடிப்பு நடைபெறும் காஷ்மீரில் தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டதை அப்பட எழுத்தாளர் ரத்னகுமார் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியான கொஞ்ச நேரத்திலேயே, இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான தாங்கள் நலமாக உள்ளதாக வடிவேலு சந்திரமுகி பங்களாவுக்குள் பயந்து நடுங்கிக்கொண்டே செல்லும் மீம் டெம்ப்ளேட்டை பகிர்ந்து கூறியுள்ளனர்.