தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன்.
‘அசுரன்’, 'பாவக்கதைகள்' (ஆந்தாலஜி) படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரியுடன் இணைந்து பணியாற்றும் “விடுதலை” படத்தை இயக்கி வருகிறார்.
லாக்கப் நாவலை விசாரணை எனும் திரைப்படமாகவும், வெக்கை நாவலை அசுரன் எனும் திரைப்படமாகவும் இயக்கிய இவர், எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய குறு நாவலான வாடிவாசலுக்கு திரைக்கதை அமைத்து சூர்யா நடிப்பிலான வாடிவாசல் திரைப்படத்தை இயக்குகிறார். முதல் முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில், கலைப்புலி தாணு தயாரிக்கும் "வாடிவாசல்" படத்தின் உருவாக்க முன்னோட்டம் சில நாட்களுக்கு முன் வெளியாகி, ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
வாடிவாசல் படத்தின் வெள்ளோட்ட படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முதலைக்குளம் அருகே உள்ள கீழப்பட்டி கிராம மாசி சிவன் ராத்திரி களரி திருவிழா செட் அமைத்து ஜல்லிக்கட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன. இதேபோல் விடுதலை படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருவாயில் உள்ளன.
இந்நிலையில் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசிய வெற்றிமாறன் தன்னுடைய உதவி இயக்குனராக பணிபுரிந்த காலகட்டத்தில் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
சென்னை லயோலா கல்லூரியில் மாணவர்களிடையே உரையாற்றிய இயக்குநர் வெற்றிமாறன், “நான் கல்லூரியில் படிக்கும் போது, ஒருநாளைக்கு 60 - 70 சிகரெட்டுகளை குடிப்பேன். பொல்லாதவன் படம் எடுக்கும் போது ஒரு நாளைக்கு 170 - 180 சிகரெட்டுகளை குடிப்பேன். பிறகு தான் உணர்ந்தேன். என்னால் என்னுடைய முழு திறனையும் பயன்படுத்த முடியவில்லை.
நான் பிட்டாக இல்லாத போது என்னை பிட்டாக மாற்ற நினைத்தேன். அச்சமயத்தில் இசிஜி எடுத்துப் பார்த்தேன்; அதில் Variation தெரிந்தது. என் மருத்துவர் புகைப்பழக்கத்திலிருந்து என்னை விடுபட வலியுறுத்தினார். பின்னர் முழுமையாக புகைப்பிடித்தல் பழக்கத்தில் இருந்து மீண்டுவிட்டேன். உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள்” என்று வெற்றிமாறன் பேசினார்.