வெங்கட் பிரபு - சிம்பு கூட்டணியில் உருவான 'மாநாடு' திரைப்படம் பற்றி, பிரபல இயக்குனர் ஒருவர் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
ஜாலியான திரைப்படங்கள் இயக்கி, மக்களை பொழுது போக்குவதில் இயக்குனர் வெங்கட் பிரபு கெட்டிக்காரர்.
'சென்னை 28' என்னும் கிரிக்கெட் குறித்த படம் மூலம் இயக்குனராக அறிமுகமான வெங்கட் பிரபு, 'சரோஜா', 'கோவா' உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். அந்த வரிசையில், நடிகர் அஜித் குமாரை வைத்து, அவர் இயக்கிய 'மங்காத்தா' திரைப்படம், இருவரின் திரைப் பயணத்திலும் முக்கியமான படமாக அமைந்தது.
சிக்கல் கடந்து வென்ற மாநாடு
இந்நிலையில், சிம்புவை வைத்து வெங்கட் பிரபு இயக்கியிருந்த 'மாநாடு' திரைப்படம், ஏராளமான சிக்கல்களைத் தாண்டி, கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் வெளியாகியிருந்தது. படம் வெளியான நாள் முதலே, மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றிருந்தது. கடந்த ஆண்டில் வெளியான சிறந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகவும், இது விளங்கியது.
பாராட்டு மழை
அது மட்டுமில்லாமல், இந்த திரைப்படத்தை பார்த்த பல இந்திய சினிமா பிரபலங்கள், வெங்கட் பிரபு, சிம்பு மற்றும் படக்குழு ஆகியோருக்கு தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த பட்டியலில், தமிழ் சினிமா இயக்குனர் ஒருவர் தற்போது இணைந்துள்ளார்.
சாதாரண மக்களின் வலியை, எந்தவித மிகைப்படுத்தலும் இல்லாமல், சினிமா ரசிகர்களின் மனதில் தாக்கம் ஏற்படும் அளவுக்கு, பதிவு செய்யும் இயக்குனர் வசந்தபாலன், இன்று மாநாடு திரைப்படத்தை பார்த்து விட்டு, ட்வீட் ஒன்றைச் செய்துள்ளார்.
ஷார்ப் திரைக்கதை
அவரது டிவீட்டில், 'மிக மிக தாமதமாக இன்று காலை தான் மாநாடு திரைப்படம் பார்த்தேன். திரைக்கதையாக மிக மிக கூர்மையாக அமைக்கப்பட்டிருக்கிறது. திரைக்கதைக்கான மாஸ்டர் வகுப்பில் சேர்க்கப்பட வேண்டிய திரைக்கதை. விக்ரம் வேதா திரைப்படத்திற்கு பிறகு தமிழில் வந்த முக்கிய திரைக்கதை ஆளுமையுள்ள திரைப்படம்' என இயக்குனர் வெங்கட் பிரபுவையும் டேக் செய்து தனது பாராட்டினை தெரிவித்துள்ளார்.
மிக மிக தாமதமாக இன்று காலை தான் மாநாடு திரைப்படம் பார்த்தேன். திரைக்கதையாக மிக மிக கூர்மையாக அமைக்கப்பட்டிருக்கிறது. திரைக்கதைக்கான மாஸ்டர் வகுப்பில் சேர்க்கப்பட வேண்டிய திரைக்கதை.விக்ரம் வேதா திரைப்படத்திற்கு பிறகு தமிழில் வந்த முக்கிய திரைக்கதை ஆளுமையுள்ள திரைப்படம்.@vp_offl pic.twitter.com/gHk5unrKTt
— Vasantabalan (@Vasantabalan1) January 14, 2022
நேர்த்தியான இயக்கம்
இயக்குனர் வசந்த்பாலன் தெரிவித்தது போலவே, மிகவும் குழப்பமான 'டைம் லூப்' என்னும் ஜானரில் வரும் மாநாடு திரைப்படத்தை, அனைத்து விதமான மக்களுக்கும் புரியும் வகையில், மிக நேர்த்தியாக இயக்கியிருந்தார் வெங்கட் பிரபு. புஷ்கர் - காயத்ரி ஆகியோர் இயக்கிய 'விக்ரம் வேதா' திரைப்படத்தின் திரைக்கதையும், அதிகம் முடிச்சுகள் உள்ள, அதே வேளையில், அதிகம் குழப்பத்தை ஏற்படுத்தாத வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
மைல்கல்
மாநாடு திரைப்படம், சில தினங்களுக்கு முன் 50 நாட்களைத் தாண்டி, இன்னும் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
அதே போல, இன்னொரு பக்கம் நடிகர் சிம்புவிற்கு, கடந்த சில ஆண்டுகளில், பெரிய ஹிட்டாக,'மாநாடு' திரைப்படம் உருவாகியுள்ள நிலையில், அவரது நடிப்பு பயணத்தில் ஒரு மைல்கல்லாகவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.