ஜெய் பீம்' திரைப்படம் ஒரே நேரத்தில் அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தத் தீபாவளி வெளியீடாக இன்று நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் ரிலீஸ் ஆகியுள்ளது.
ஜெய் பீம்' திரைப்படம் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் தமிழகத்தில் 1995-ல் நடந்த சம்பவங்களைக் கொண்டு த.செ.ஞானவேல் கதையை உருவாக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் சூர்யா, பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தை இன்று பார்த்துவிட்டு நடிகர் இயக்குனர் ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான் படக்குழுவை பாராட்டி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் மூடிக்கிடந்த கல்மனங்களை எல்லாம் பேச வைத்திருக்கிறது.எத்தனையோ பேர் சட்டங்களைப்படித்தாலும் அண்ணன் சந்துரு போன்ற ஒரு சிலர் தான் வாழ்வு முழுதும் உயிர்வாழ்வதற்கே போராடும் ஒடுக்கப்பட்ட குரலற்ற மக்களுக்காக அதை பயன்படுத்துகின்றனர்! இத்திரைப்படம் மக்களின் விடுதலைக்கான கருவியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.காவல்துறை உயர் அதிகாரிகளின் அதிகார அழுத்தங்களால் ராசாக்கண்ணு போன்ற அப்பாவி மக்களின் வாழ்வு பறிபோவது இனியாவது நிறுத்தப்பட வேண்டும்.
நான் அன்று சொன்னதை சூர்யா இப்பொழுது புரிந்திருப்பார் என நினைக்கிறேன்.அவருடைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இத்திரைப்படத்தை தலை நிமிர்ந்து தங்கள் தலைமுறையினரிடம் பெருமையுடன் கூறிக்கொள்வார்கள்.இவரைப்போன்றே பெரு முதலீடு படங்களில் மட்டுமே நடிக்கும் மற்ற நடிகர்களும் மனது வைத்தால் இச்சமூகத்திற்கு தேவையான இது போன்ற சிறந்த படைப்புக்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
மக்களால் கொண்டாடப்படும் இத்திரைப்படத்தை சட்டம்-நீதி-காவல் துறையில் உள்ளவர்கள் கட்டாயம் காண வேண்டும்.கலை மக்களுக்கானது!அதை ‘ஜெய் பீம்’ சாதித்திருக்கிறது!! எனதன்பு சூர்யா,இயக்குநர் ஞானவேல்,அரங்கக்கலை இயக்குநர் கதிர் மற்றும் இத்திரைப்பட நடிப்புக்கலைஞர்கள்,தொழில்நுட்பக்கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துகளும்.- அன்போடு தங்கர் பச்சான் என குறிப்பிட்டுள்ளார்.
ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் சந்துருவாக, நடித்துள்ளார் சூர்யா. படத்தினை ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைந்து தயாரித்துள்ளார். ’ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார். படத்திற்கு கேமரா எஸ்.ஆர்.கதிர், எடிட்டர் ஃபிலோமின்ராஜா. கலை இயக்குநராக கதிர் பணியாற்றியுள்ளார்.