தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான சுரேஷ் கிருஷ்ணா இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார்.
30 years of அண்ணாமலை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கையில் 90களில் வந்த சில படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்து, அவரை இந்திய அளவிலும் உலக அளவிலும் வசூல் மன்னனாக்கின. அப்படி வந்த படங்களில் அண்ணாமலை, முத்து, பாட்ஷா, படையப்பா ஆகிய படங்கள் முக்கியமானவை. இதில் அண்ணாமலை மற்றும் பாட்ஷா ஆகிய இரு படங்களையும் இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. இன்று அண்ணாமலை திரைப்படம் ரிலீஸாகி 30 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இதையொட்டி இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா சூப்பர் ஸ்டாரை சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அண்ணாமலை
ரஜினிகாந்த், சரத்பாபு, குஷ்பு, ராதாரவி, மனோரமா, நிழல்கள் ரவி மற்றும் ஜனகராஜ் நடித்த இந்த திரைப்படத்துக்கு தேவா இசையமைத்திருந்தார். ரஜினிகாந்த் படத்துக்கு தேவா இசையமைத்தது அதுவே முதல்முறை. அதன் பின்னர் அந்த கூட்டணி பாட்ஷா, அருணாசலம் என வெற்றிப்படங்களைக் கொடுத்தது. ரஜினிகாந்தின் குருநாதரான பாலசந்தரின் கவிதாலயா பிலிம்ஸ் தயாரித்த இந்த படம் 1992 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. படத்தில் ரஜினி சரத்பாபு மற்றும் ராதாரவி ஆகியோரிடம் சவால் விட்டு பேசும் காட்சி ரஜினி ரசிகர்களின் எவர்கிரீன் காட்சியாக இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.
ரஜினியின் டைட்டில்கார்டு
ரஜினி படங்களின் வரிசையில் அண்ணாமலைக்கு மற்றொரு சிறப்பம்சமும் உண்டு. ரஜினி படங்களில் அவரது பெயருக்காக போடப்படும் டைட்டில் கார்டுகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். அந்த நேரம் தியேட்டரே அதிரும் அளவுக்கு ரசிகர்களின் ஆரவாரம் இருக்கும். அந்த டைட்டில் கார்டு முதல்முதலாக அண்ணாமலை படத்தில்தான் போடப்பட்டது. அதன் பின்னர் வந்த அனைத்துப் படங்களிலும் அது பின்பற்றப்பட்டு வருகிறது. இப்படி ரஜினி ரசிகர்களுக்கு எண்ணற்ற நாஸ்டால்ஜியா தருணங்களைக் கொண்டுள்ள அண்ணாமலை திரைப்படம் இன்றோடு 30 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.