கலகத்தலைவன் படத்தின் இசை வெளியீட்டுவிழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இயக்குனர் சுந்தர் சி பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்திருக்கிறார்.
நடிகர் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மகிழ் திருமேனியின் இயக்கத்திலான கலகத்தலைவன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். மெட்ராஸ் பட புகழ் கலையரசனும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்கள் போக, நடிகர் பிக்பாஸ் ஆரவ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
நடிகராக உதயநிதி ஸ்டாலின் கடைசியாக அருண்ராஜா காமராஜ் இயக்கத்திலான நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்தார். அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே இந்த படத்தின் மோஷன் போஸ்டர், டீஸர், சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றிருக்கிறது.
இந்நிலையில், இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் சுந்தர் சி,"நான் படம் பண்ணனும்னு ஆசைப்பட்டு முடியாத 2 ஹீரோக்கள் இருக்குறாங்க. ஒருவர் திரு.தளபதி விஜய் அவர்கள். இன்னொருவர் மதிப்பிற்குரிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள். முன்னதாகவே அவருடன் ஒரு படம் இயக்கும் வாய்ப்பு இருந்தது. இயக்குனர் ராஜேஷின் கதைக்கருவில், உதயநிதி ஸ்டாலினின் ஐடியாவில் இருந்த அந்த கதையை நான் படமாக்க அனுமதி கேட்டேன். அவரும் ராஜேஷ் சாரும் உடனே ஓகே சொன்னார்கள். அப்படி நான் பண்ண படம் 'தீயா வேலை செய்யணும் குமாரு'. அப்படம் பெரிய வெற்றியை கொடுத்தது. அதற்காக இப்போது நன்றி சொல்லிக்கொள்கிறேன். ஒரு ஹீரோ தனக்காக எழுதப்பட்ட ஸ்க்ரிப்டை வேறு ஒருவர் படமாக எடுக்க ஒப்புக்கொள்ள ஒரு பெரிய மனதுவேண்டும்.
அதற்காக அவருக்கு நன்றி சொல்கிறேன். அதேமாதிரிதான் இப்போதும் இருக்கிறார். சில சின்ன சின்ன விஷயங்களுக்கு அவருக்கு மெசேஜ் அனுப்பும்போது, இவ்வளவு பெரிய இடத்தில் இருப்பவரிடம் இதை கேட்கலாமா எனத் தோன்றும். ஆனால் , அடுத்த 10 நிமிடத்திற்குள் பதில் வரும். இல்லையென்றால் அதுகுறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். அதனாலேயே அவர் இப்படி உயர்ந்த இடத்தில் இருக்கிறார். மேலும் மேலும் உயரங்களை அடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலமாக பல இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளித்துவருவதற்கும் நன்றி. கலகத்தலைவன் மாபெரும் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்கள். இறைவனை மனமார வேண்டுகிறேன். நன்றி" என்றார்.