தமிழ் சினிமாவில் முன்னணி எடிட்டர் மற்றும் தயாரிப்பாளரான எடிட்டர் மோகன் 'வேலியேற்ற வேதம்' எனும் புத்தகத்தையும் அவரது மனைவி வரலட்சுமி மோகன் 'தனி மனிதன்' என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளனர். இந்த இரு புத்தகங்களின் வெளியீட்டு விழா நேற்று (டிசம்பர் 3) நடைபெற்றது.
இந்த விழாவில், இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பாக்யராஜ், பாண்டியராஜன், எஸ்.பி.ஜனநாதன், மோகன் ராஜா தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ஜசரி கே.கணேஷ், T.G.தியாகராஜன், நடிகர்கள் பிரபு, ஜெயம் ரவி, கவிஞர் பா.விஜய், விவேகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், எடிட்டர் மோகனுக்கும் தனக்கும் இருக்கும் நட்பு குறித்தும் இருவரது வாழ்வில் உள்ள ஒற்றுமை குறித்தும் பேசினார். அப்போது, ''ஒரு நல்ல தமிழ் படத்தை தெலுங்குல ரீமேக் பண்ண போறாரு. யாரு டைரக்டரா போடலாம்னு யோசிச்சப்போ அவரது மகன் ராஜா, 'அப்பா நான் டைரக்டர் பன்றேனு' சொன்னார். அதனால அவரை டைரக்டராக்கினார்.
அதே மாதிரி, என் பையன் விஜய்யை விஸ்காம் சேர்த்தேன் கால்ல கைல விழுந்து.. ஆனா ஒரு வருஷம் தான் படிச்சார். 2வது வருஷம் திடீர்னு வந்து நடிக்கணும்னார், நான் நடிகனாக்குனேன். அவர் இயக்குநராக்கியிருக்கார்'' என்றார்.