இயக்குநர் மற்றும் நடிகர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன், தான் இயக்கி நடித்த ‘ஒத்த செருப்பு - சைஸ் 7’ படத்துக்காக 67வது தேசிய விருது விழாவில் விருது பெற்றார். இந்நிலையில் தன் பிறந்த நாளை கொண்டாடியது குறித்த ஒரு முக்கிய பதிவை பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் பாக்யராஜின் உதவி இயக்குநராக இருந்து, திரைப்பட இயக்குநராகவும் நடிகராகவும் பரிமளத்த இராதாகிருஷ்ணன் பார்த்திபன் தற்போது இரவின் நிழல் எனும் திரைப்படத்தை உருவாக்கும் பணியில் இருக்கிறார். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இதேபோல் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்தை இந்தியில் அமிதாப் பச்சன் தயாரிப்பில் அபிஷேக் பச்சனை நாயகனாக வைத்து இயக்குகிறார். இந்நிலையில் கடந்த நவம்பர் 15-ஆம் தேதி, தான் கொண்டாடிய தமது பிறந்த நாள் குறித்த ஒரு நெகிழ்ச்சி பதிவை இயக்குநர் பார்த்திபன் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வணக்கம் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு… சமீபத்தில் என் பிறந்த நாள், பொதுவாக நான் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை, காரணம் உருவமாக நான் வெளி வந்த நாளை விட, ஒரு கலைஞனாக பார்த்திபன் என்ற பெயரிட்டு என்னை இந்த திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய திரு.பாக்யராஜ் அவர்கள் மூலமாக, நான் பிறந்த பிறகு தான் என் வாழ்க்கையில் சுபிட்சம் தொடங்கியது.
89,90 களில் என் பிறந்த நாளின் போது, மிகப்பெரிய விழாவாக நான் கொண்டாட, அன்றைய செய்திதாள்களில், தினத்தாள்களில் என்னை வாழ்த்தி வந்த விளம்பரங்கள் ஏராளம். நடிகர் சிவகுமார் அவர்கள் என்னிடம் சொன்னார் ‘சில வருடங்களில் இது கொஞ்சம் குறையலாம், குறையும்போது உன் மனம் வருத்தப்டும் வேண்டாமே’ என்றார்.
அன்றிலிருந்து நிறுத்தி விட்டேன் என் பிறந்த நாள் கொண்டாட்டங்களை. நாம் தினந்தோறும் இறந்து, மறுநாளில் பிறக்கிறோம். அது தான் உண்மை. ஒவ்வொரு உறக்கமும் ஒரு சிறிய மரணம். விடிந்த பின் தான் தெரிகிறது, இன்னும் வாழ்க்கை மிச்சமிருக்கிறதென்று. அப்படி பல முறை நாம் மடிந்தும் பிறக்கிறோம். மரணம் என்பது கொஞ்சம் மானம் போகும்போது கூட நிகழ்கிறது. அப்படி எல்லோர் வாழ்விலும் சில மரணங்கள், எனக்கும் சில மரணங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
ஒரு மரணத்திலிருந்து நான் மீண்டும் உயிர்த்தெழுந்தது குழந்தைகளின் அன்பால். அபி, கீர்த்தி, ராக்கி மூவரும் மீண்டும் ஒரு முறை எனக்கு உயிர்பிச்சை தந்தார்கள். அன்றிலிருந்து துவங்கியது மீண்டும் ஒரு நம்பிக்கையான வாழ்க்கை.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் பார்த்திபனின் இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் பாக்யராஜ், நடிகர் பிரபு தேவா, நடிகர் விஜய் சேதுபதி, ரவிவர்மன், இசையமைப்பாளர் சத்யா, இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். இவர்களுடன் தமது சந்திப்பு சிறப்பாக இருந்ததாகவும் பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார்.