இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருவதோடு, அந்நிறுவனத்தின் திரைப்படங்கள் மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், யாழி நிறுவனத்தின் விக்னேஷ் சுந்தரேஷனுடன், நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘குதிரைவால்’. அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லினோனல் ஜேசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஜி.ராஜேஷ் குமார் எழுதியிருக்கிறார்.
தீபிகா படுகோனை வம்புக்கிழுத்த நடிகை கங்கனா ரனாவத்! புதிய படம் பற்றிய கருத்தால் சர்ச்சை
கலையரசன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அஞ்சலி பாட்டீல் நாயகியாக நடித்திருக்கிறார். கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசைத்தொகுப்பு வெளியீட்டு விழா நேற்று சத்யம் திரையரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இசையமைப்பாளர் பிரதீப் குமாரின் பிரமாண்ட இசைக்குழுவினர் மூலம் படத்தின் பாடல்கள் நேரடியாக இசைக்கப்பட்டது. ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இசை நிகழ்ச்சியை தொடர்ந்து இயக்குநர் பா.இரஞ்சித் இசைத்தொகுப்பை வெளியிட, ‘குதிரைவால்’ படக்குழுவினர் பெற்றுக்கொண்டார்கள்.
இயக்குநர் பா.இரஞ்சித் பேசுகையில், “ரொம்ப மகிழ்ச்சியான நிகழ்வு இது. சினிமாவுல பல வகைகள் இருக்கு, அதை பார்த்து தான் சினிமாவுக்கே நான் வந்தேன். நான் பார்த்த சினிமாவால் பாதிக்கப்பட்டு சினிமா எடுத்தேனா, இந்த சமூகம் அதுபோன்ற ஒரு சினிமாவை எடுக்க விடவில்லை. பல கேள்விகள் கேட்கிற, எனக்குள் இருக்கும் பதில்களை பேசுகிற திரைப்படங்களை எடுக்க நிர்பந்திக்கப்பட்ட ஒரு ஆள் நான். ஆனால், அதை ரசித்து மிக சந்தோஷமாக தான் செய்துக்கொண்டிருக்கிறேன். அது சமூகத்தில் நிறைய கேள்விகளை உருவாக்குகிறது என்றும் நம்புகிறேன். மற்றபடி என்னுடைய சினிமா விருப்பம் என்பது, ஒரு கலைஞனாக பல விருப்பங்கள் இருக்கு. கார்டியனை ரொம்ப பிடிக்கும், கிளிம்ட்டு ரொம்ப பிடிக்கும். ஆனால், இந்த நோக்கம் என் சினிமாவில் தெரிகிறதா என்றால் தெரிகிறது தான், ஆனால் அவை ரொம்ப மறைமுகமாகத்தான் தெரிகிறது. அப்படித்தான் என் சினிமாவை நான் பார்க்கிறேன். தத்தோஷ்கி எனக்கு ரொம்ப பிடிக்கும், அவருடைய படங்களை பார்த்து மெய் மறந்து நின்றிருக்கிறேன்.
அதுபோன்ற படங்களை எடுக்க வேண்டும் என்று நான் நினைத்ததில்லை, ஆனால் அவருடைய படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுபோன்ற ஒரு ரசிகராக தான் நான் மனோஜை பார்க்கிறேன். ஜெனி மூலமாக மனோஜ் மற்றும் அவருடைய குழுவை சந்தித்தேன். அப்போது ராஜேஷ் கதை சொன்ன போது நான்கு மணி நேரம் கதை சொன்னார். நான் புத்தகத்தை படித்துவிடுகிறேன், என்று கேட்டேன். அதை கொடுத்தார்கள். ஆனால், அது ஐந்நூறு பக்கங்கள் இருந்தது. பிறகு மனோஜ் இயக்கிய குறும்படம் ஒன்றை பார்த்தேன், மிக சிறப்பாக இருந்தது. அந்த குறும்படத்தின் மேக்கிங் போன்ற அம்சங்கள் என்னை வெகுவாக கவர்ந்ததோடு, மனோஜ் மீது மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது. எனக்கு பொதுவாக தன்னிச்சை படைப்பாளிகள் மீது பெரிய நம்பிக்கை இருக்கிறது. அவர்களால் தான் புதிதாக சொல்ல முடியும், ரசிகர்களுடைய கண்ணோட்டத்திற்கு ஏற்றவாறு கதை சொல்வார்கள். அதுபோல தான் குதிரைவால் படத்தை நான் பார்த்தேன். குதிரைவால் திரைக்கதை என்னை மிகவும் கவர்ந்தது. ராஜேஷோட பேச்சு, நம்பிக்கை சம்மந்தமான பேச்சு போன்றவை கவர்ந்தது. நம்பிக்கையை நாம ஒரு நம்பிக்கையை உருவாக்கி தான் அழிக்க முடியும், என்று என்னிடம் ஒரு நாள் சொன்னார். அது ரொம்ப பிடித்திருந்தது.
இந்த கதை என்னிடம் சொல்லும் போது, பொருளாதாரா ரீதியாக என்னால் இப்போதைக்கு உதவ முடியாது, மற்றபடி என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன் என்று சொன்னேன். அதனை தொடர்ந்து அவர்கள் பல தயாரிப்பாளர்களை சந்தித்தார்கள். நானும், பல இடங்களுக்கு அவர்களை அனுப்பினேன். பிறகு அவர்களுடைய நண்பர் விக்னேஷ் தயாரிப்பதாக முன் வந்தார். அப்போது கூட அவரிடம் முழு கதையை சொல்லுங்கள் என்று கூறினேன். ஏன் என்றால் சினிமா நிரந்தர வருமானம் அல்லது லாபம் இல்லாத தொழிலாக இருக்கிறது. சினிமா மிகப்பெரிய லாபம் கொடுக்கும் தொழில்தான் ஆனால் எல்லோருக்கும் லாபம் கொடுக்காது. இதை நான் எல்லோரிடமும் சொல்வதுண்டு. படம் தயாரிக்க வேண்டும் என்று வருபவர்களிடம்நான் இதை சொல்லாமல் இருக்க மாட்டேன். ஏன் என்றால் ஆர்வத்தில் சினிமாவுக்கு வருகிறார்கள். பிறகு அதில் இருக்கும் பாதிப்புகளால் அவர்களால் தொடர்ந்து இயங்க முடியவில்லை. அதனால், சினிமாவில் இருக்கும் பாதகங்களை நான் முதலில் சொல்வேன், அதை கேட்டுக்கொண்டு தொடர்ந்து பயணிக்க விரும்புகிறவர்களிடம் சினிமாவில் இருக்கும் சாதகங்களை சொல்வேன். இப்படி நான் சினிமாவுக்கு வர விரும்பிய பலரை தடுத்திருக்கிறேன்.
அப்படித்தான் விக்னேஷிடம் சினிமாவில் பாதகங்களை கூறினேன். ஆனால், அதை கேட்ட பிறகும் அவர் படம் தயாரிக்க தயாராகவே இருந்தார். இந்த படம் எந்த மாதிரியான படம், இந்த படம் கமர்ஷியல் ரசிகரகள் பார்க்கும் படமா? அப்படி இல்லை என்றால் இந்த படத்தை இந்த பட்ஜெட்டில் எடுக்க வேண்டும், என்று கூறினேன். அதே சமயம், இந்த படத்தை நாம எடுக்கவில்லை என்றால், வேறு யாராலும் எடுக்க முடியாது, என்றும் கூறினேன். அதேபோல், ராஜேஷ் மற்றும் மனோஜ் ஆகியோரிடம் விக்னேஷிடம் அனைத்து தகவல்களையும் சொல்லுங்கள் என்று கூறினேன். அப்போது மனோஜ் விக்னேஷிடம் பேசுக்கொண்டு தான் இருக்கிறேன், என்று சொல்வார். இவ்வளவு பிரச்சனைகளையும் கடந்து விக்னேஷ் இந்த படத்தை ரிலீஸ் வரை எடுத்து வந்திருக்கிறார், அவருக்கு மிகப்பெரிய நன்றி. ஏன் என்றால், ஒரு படத்தை ஆரம்பிக்கும் போது தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இருக்கும் உறவு, படம் முடியும்போது இல்லாமல் போகிறது. இது என் சினிமா பயணித்தில் நான் எதிர்கொண்டிருக்கிறேன். அவ்வளவு பிரச்சனைகள் இங்கு இருக்கிறது. நமக்கு இடையே இருப்பவர்களே பிரச்சனையை உருவாக்கி விடுவார்கள். அப்படி ஒரு சூழலில் விக்னேஷும், மனோஜும் படம் ஆரம்பிக்கும் போது எப்படி நட்பாக இருந்தார்களோ இன்று வரை அதே நட்போது தொடர்வது மிகப்பெரிய விஷயம். இவர்களுடைய இந்த நட்பு தான் யாழி என்ற மிகப்பெரிய முயற்சியை உருவாக்கியிருக்கிறது என்று நான் நம்புகிறேன்.உண்மையிலேயே தமிழ் சினிமா சூழலாக இருக்கட்டும், கலாச்சார நடவடிக்கையாக இருக்கட்டும் யாழி மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.
இந்த படத்தில் கலையரசன் மற்றும் அஞ்சலி மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கலையரசனுக்கு மிக முக்கியமான படமாக இருக்கும். அதேபோல் ராஜேஷின் எழுத்து பேசப்படும். அந்த எழுத்து தான் என்னை கவர்ந்தது. நான் படம் பார்க்கும்போது அது தான் என்னை கவர்ந்தது. ஒருவரால் எப்படி இப்படி எழுத முடியும் என்று எனக்கு தோன்றியது. ஒரு அரசியலை நேரடியாக இல்லாமல் மறைமுகமாக அதே சமயம் மிக அழுத்தமாக சொல்லியிருக்கும் விதம் வியப்பை ஏற்படுத்தியது. அதிகமாக படிக்கும் பழக்கம் தான் அவரை இப்படி எழுத வைத்தது என்று நம்புகிறேன். அவரை பேசவிட்டு நான் கேட்டுக்கொண்டே இருப்பேன். சில சமயங்களில் சான் வியந்த எழுத்தாளர்களை கூட, அவர்கள் எதுவும் இல்லை என்று கலாய்த்துவிடுவார். நமக்கே அது அதிர்ச்சியாக இருக்கும். அந்த வகையில் அவர் வேறு ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கிறார். இந்த வயதுக்கு அவரிடம் அனுபவம் என்பது மிகப்பெரியது. அது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்துக்கொண்டே இருக்கிறது.
மாயாலாஜத்திற்கும் நிஜத்திற்கும் இடையே இருக்கும் தொடர்பு தான் இந்த படம். என்னுடைய ஓவியங்களில் கூட இதை நான் பயன்படுத்தியிருக்கிறேன். அதாவது, என்னுடைய அக உணர்வுக்கும், புற உணர்வுக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கிறது. என்னுடைய அக உணர்வுபடி என்னால் வாழ முடியுமா? என்றால் அது முடியவே முடியாது. காரணம், அது எல்லையற்றது. யாருக்கும் யாரும் அடிமை இல்லை, சக மனிதனை மனிதாக நேசிக்க வேண்டும், என்று சொல்வது என் அக உணர்வு. ஆனால், புற உணர்வில் பார்க்கும் போது இங்கு யாரும் அப்படி வாழ்வதில்லை. நாம் பார்த்து வியந்த ஜாம்பவான்கள், புகழ் பெற்ற கலைஞர்கள் கூட அந்த வேறுபாட்டை கடைபிடிப்பதை பார்த்து அவர்களிடம் இருந்து விலகியிருக்கிறேன். அந்த சிஷ்ட்டத்தை அவர்கள் அனுபவித்த ரசிப்பதை பார்த்து அங்கிருந்து ஓடியிருக்கிறேன். அப்போது என் புற உணர்வில் இருந்து விலகி அக உணர்வில் அதை நான் தேடும் போது அதை தான் நான் கலையாக பார்க்கிறேன். அந்த விஷயத்தை தான் குதிரைவால் படத்தில் பேசியிருக்கிறார்கள். குதிரைவால் படத்தில் ”நினைவில் தொலைத்ததை கனவில் தேடுகிறேன்” என்ற வசனம் வந்துக்கொண்டே இருக்கும்.
இது தான் குதிரைவால் படம் என்று சொல்லலாம். நினைவில் தொலைத்ததை எப்படி கனவில் தேட முடியும். பிராய்ட்டை படிக்கவில்லை என்றால், இதை என்னால் புரிந்துக்கொள்ள முடியாது என்று நினைக்கிறேன். என் மனைவி அனிதா மூலமாகத்தான் பிராட்டை படித்தேன். அதன் பிறகு தான் தெரிந்தது மனிதன் எப்படி கொடூரமானவன் என்று தெரிந்தது. பிறகு கனவை பற்றி அவர் எழுதியது என்னை மிகவும் பாதித்தது. அதன் மூலம் எனக்கு தோன்றிய ஒரு கதை ‘தண்ணி கோழி’ என்ற தலைப்பில் எழுதியிருக்கிறேன். நாம நிஜத்தில் தொலைத்த நிறைய விஷயங்களில் கனவில் தேடுவோம், அந்த சுகத்தை கனவில் அனுபவிப்போம், அதை தான் இந்த படம்பேசுகிறது என்று நினைக்கிறேன். பிராட்ய் இல்லை என்றால் இதை என்னால் புரிந்துக்கொள்ள முடியாது என்று நினைக்கிறேன். அவ்வளவு ஒரு தனிப்பட்ட ஒரு மனிதனின் வாழ்க்கை. அப்படி ஒரு படமாகத்தான் குதிரைவால் படம் இருக்கும். குதிரைவால் தமிழ் சினிமாவின் தொடக்கமாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன்.
குதிரைவால் அற்புதமான படமா? என்றால், இல்லை. சில குறைகள் இருக்கிறது. ஆனால், அந்த குறைகளை மறந்து, படத்தில் சொல்லப்பட்டிருக்கும் புதிய விஷயங்கள் இருக்கும். இந்த கதையை கையாண்ட விதம், காட்சிகளை படமாக்கிய விதம், என அனைத்தும் தமிழ் சினிமாவுக்கு மிக புதிதாக இருக்கும். இந்த படத்தோட அனுபவம் ரசிகர்களுக்கு மிக புதியதாகா இருக்கும். இது ஒரு ஆராய்ச்சி ரீதியிலான படம் என்று சொல்கிறார்கள். ஆனல, இது சினிமாவுக்கே ஒரு புதிய பாதையை அமைக்கும் என்று நம்புகிறேன். அதாவது நம் உள் உணர்வில் இருக்கும் விஷயங்களை பேசும் படமாக இருக்கும். சினிமா இன்று இருக்கும் சூழலில் திரையரங்கை விட ஒடிடி-யில் படத்தை வெளியிடலாம் என்று நான் கூறினேன். என்னுடைய ‘ரைட்டர்’ படம் கூட திரையரங்கில் வெளியாகி பல பிரச்சனைகளை எதிர்கொண்டது. அதனால், ஒடிடி-யில் வெளியிடுவது பற்றி ஆலோசிக்குமாறு கூறினேன். ஆனால், விக்னேஷ் இந்த படத்தை திரையரங்கில் தான் வெளியிட வேண்டும், என்று உறுதியாக இருந்தார். காரணம், இந்த படம் திரையரங்க ரசிகர்களுக்கான படம். அவர்களுக்கான புதிய விஷயத்தை சொல்லும் படம்.
எனவே, ரசிகர்கள் இந்த படத்தை தவறவிட கூடாது என்று நான் கேட்டுக்கொள்கிறேன், அப்படி ஒரு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் படமாக குதிரைவால் இருக்கும் என்பதை நான் உறுதியாக சொல்வேன். அதேபோல், யாழி இந்த படத்தோட இல்லாமல் பல விஷயங்களை செய்ய போகிறது. என்னுடைய நட்சத்திரம் நகர்கிறது படமும் அவர்களுடன் சேர்ந்து செய்திருக்கிறேன். முழுக்க முழுக்க காதலை பேசுகிற படம். அதேபோல், பிரதீப்பின் இசையில் பாடல்கள் அனைத்தும் மிக சிறப்பாக வந்துள்ளது. அவருடைய பின்னணி இசையும் மிக சிறப்பாக வந்துள்ளது. யாழி உடன் சேர்ந்து நீலம் சேர்ந்து இந்த படத்தை கொடுத்திருக்கிறோம் நிச்சயம் இந்த படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.
திடீர் டிரெண்டான நடிகை மீரா ஜாஸ்மின்... வைரலாகும் HOT போட்டோஷூட் VIDEO & புகைப்படங்கள்!