தமிழ் சினிமாவில் ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர் முன்னணி இயக்குநர் N.லிங்குசாமி. அண்மையில் ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் வெளியான வாரியர் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
இயக்குநராக மட்டுமல்லாமல், திருப்பதி பிரதர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் லிங்குசாமி திகழ்ந்து வருகிறார். இதனிடையே கடந்த 2014-ம் ஆண்டு "எண்ணி ஏழு நாள்" என்கிற படத்தை தயாரிப்பதற்காக தங்களிடம் பெற்ற கடனை திரும்பச் செலுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி, பிவிபி கேப்பிட்டல்ஸ் நிதி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பிவிபி நிறுவனத்திடம் பெற்ற கடனை திரும்பச் செலுத்த இயக்குநர் லிங்குசாமிக்கு உத்தரவிட, இதனைத் தொடர்ந்து, இயக்குநர் லிங்குசாமி தரப்பு, பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுனத்திற்கு வழங்கிய காசோலைகள் வங்கியில் போதிய பணம் இல்லாமல், திரும்பி வந்ததாகவும் குற்றம் சாட்டி பிவிபி நிறுவனம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில்தான், இயக்குநர் லிங்குசாமிக்கு கடந்த 2022 ஆகஸ்ட் மாதம், 6 மாத சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தது லிங்குசாமி தரப்பு. இந்நிலையில் இப்போது இம்மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றம், மனுவை தள்ளுபடி செய்ததுடன், வட்டியுடன் சேர்த்து கடனை திருப்பி செலுத்த உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளது.
மேலும் கடந்த ஆகஸ்டு மாதம், சைதாப்பேட்டை நீதிமன்றம் அளித்த 6 மாத சிறை தண்டனை தீர்ப்பை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தற்போது உறுதி செய்துள்ளது. இந்நிலையில்தான், இதுகுறித்து இயக்குநர் லிங்குசாமி தரப்பில் தன்னிலை விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “இந்த வழக்கு பிவிபி கேப்பிட்டல் லிமிடெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா லிமிடெட் இடையிலானது. அவர்கள் தொடுத்த வழக்கின் மேல் மாண்புமிகு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நாங்கள் மாண்புமிகு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக உடனடியாக மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம்” என்று இயக்குநர் N.லிங்குசாமி குறிப்பிட்டுள்ளார்.