அவள் அப்படிதான் படத்தின் ரீமேக் குறித்து இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் மனம் திறந்து பேசியுள்ளார்.
1978-ல் ரஜினி, கமல், ஶ்ரீப்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் அவள் அப்படிதான். ருத்ரய்யா இயக்கிய இத்திரைப்படம் காலங்கள் கடந்தும், இன்னும் நினைவு கூறப்பட்டு வருகிறது. மேலும் இதில் ஶ்ரீப்ரியா நடித்த மஞ்சு கதாபாத்திரம் பலரின் ஆல் டைம் ஃபேவரைட் என சொல்லலாம். இதனிடையே அவள் அப்படிதான் படத்தின் ரிமேக் குறித்து அண்மையில் செய்திகள் வெளியாகின. இதில் ஷ்ருதி ஹாசன் நடிப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இதுகுறித்து நம்மிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, ''நானும் ஷ்ருதி ஹாசனும் நீண்ட காலமாகவே நல்ல நட்பில் இருந்து வருகிறோம். அப்படி ஒரு முறை நான் அவரிடம், அவள் அப்படிதான் படத்தை ரீமேக் செய்வது பற்றிய கூறினேன். அவரும் அப்படத்தில் நடிக்க ரொம்பவே ஆர்வமாக இருந்தார். பிறகு நாங்கள் வெவ்வேறு வேலைகளில் பிசியாகிவிட்டோம். தற்போது நான் ஷ்ருதியை டேக் செய்து போட்ட ட்வீட்டையடுத்து, இத்திரைப்படம் குறித்து பேச்சு மீண்டும் எழுந்துள்ளது, அவ்வளவுதான்.
அவள் அப்படிதான் படத்தின் மேல் எனக்கு மிகப்பெரிய மரியாதையும் தீராக் காதலும் உள்ளது. அத்தகைய திரைப்படத்தின் உரிமையை முறையாக பெற்று, அதன் தன்மையை கெடுக்காமல், இப்போதுள்ள தலைமுறைக்கு ஏற்ற வகையில் அதை கொடுக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். இப்போதைக்கு ஸ்க்ரிப்ட் வேலைகளை முடித்துள்ளேன். கமல் நடித்த அருண் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மானை நடிக்க வைக்கும் எண்ணம் உள்ளது. இப்போது நாங்கள் அவள் அப்படிதான் ரீமேக்கின் ஆரம்பக்கட்டத்தில் மட்டுமே உள்ளோம். விரைவில் படத்தின் உரிமையை முறையாக பெற்று, மற்ற அறிவுப்புகள் வரும் என எதிர்ப்பார்க்கிறோம்'' , என தெரிவித்தார்.
மேலும் அவர், ''இப்போது நான் இயக்கியுள்ள ப்ளான் பண்ணி பண்ணனும், ரிலீஸுக்காக காத்திருக்கிறது. மேலும் நான் ஒரு படத்தை இயக்குவதில் ஒப்பந்தமாகியுள்ளேன். லாக்டவுன்னுக்கு பிறகு அந்த அறிவுப்பு வரும். இந்த வேலைகள் எல்லாம் முடிந்த பின்னர், அவள் அப்படிதான் படத்தின் ரீமேக்கில் கவனம் செலுத்தவுள்ளோம்'' என அவர் கூறினார்.