கொரோனா பிரச்னை ஒவ்வொரு நாளும் உலகின் பல்வேறு மனிதர்களை பாதிப்புக்குள்ளாக்கி வர, மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் வீட்டில் உள்ளனர். இந்த வைரஸ் அதிவேகமாக அனைவரையும் தாக்குவதால், வரும் முன் காப்போம் என்ற கொள்கையைப் பின்பற்றியுள்ளது இந்திய அரசாங்கம். 144 சட்டப் பிரிவில் கடந்த இரண்டு வாரங்களாக ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகிறது.
இதனால் சிறு தொழில் செய்பவர்கள், தினக்கூலிகள், திரைத்துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடுமையான சிக்கலில் தவிக்கின்றனர்.
இந்நிலையில் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் தனிப்பட்ட முறையிலும் பெஃப்ஸி உள்ளிட்ட அமைப்புகள் மூலமாகவும் மக்களுக்கு உதவி வருகின்றனர். தற்போது தனது பங்குக்கு, ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லி நலிவுற்ற திரைக் கலைஞர்களுக்கு நிதியுதவி செய்ய முன் வந்துள்ளார்.
'இயக்குநர்கள் யூனியனுக்கு ரூபாய் 5 லட்சமும், ஃபெஃப்சி யூனியனுக்கு ரூபாய் 5 லட்சமும் என முறையே ரூபாய் 10 லட்சத்தை நிதியுதவியாக அட்லி வழங்கியிருக்கிறார்.
நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் இத்தகைய காலத்தால் செய்யும் உதவி சமூக வலைத்தளங்களில் இயங்கும் மக்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.