கொரோனா வைரஸால் எல்லா துறைகளையும் போல, திரைத்துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டு, படங்களின் ரிலீஸ் தள்ளி போயிருக்கின்றன. இதனிடையே போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது துவங்கியிருக்கின்றன. ஆனால் தியேட்டர்கள் எல்லாம் எப்போது மீண்டும் செயல்படும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இத்தகைய சூழ்நிலையில், நாம் மிஸ் செய்யும் தியேட்டர்களையும், அதன் நினைவுகளையும் மீட்டெடுக்கும் விதமாக, நமது Matinee Memories-ன் இந்த அத்தியாயத்தில் இயக்குநர் சமுத்திரக்கனி, தனது மறக்கமுடியாத திரையரங்க அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
இயக்கம், நடிப்பு என ஆல் ஏரியாவிலும் கலக்கி வரும் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் கலைஞரான சமுத்திரக்கனி தியேட்டர் என்றதும் ரொம்பவே மகிழ்ச்சியாக ஆரம்பித்தார். காரணம் தியேட்டருக்கும் அவருக்குமான உறவு அப்படியானது. இதுகுறித்து பேசிய அவர், ''எனக்கு சின்ன வயசுல இருந்தே படம் பார்க்குறதுல பெரிய ஆர்வம் இல்ல. அப்படி இருந்த என்னை, என் நண்பன் 8-வது படிக்கும் போது படத்துக்கு கூட்டிட்டு போயிட்டான். எங்க ஊர்ல இருக்குற காளீஸ்வரி தியேட்டர் அப்போ ரொம்ப பேமஸ். அங்கதான் படங்கள் பார்ப்போம். நான் இப்படி தொடர்ந்து படத்துக்கு போறது பிடிக்காத எங்க அப்பா, என்னை உள்ள விட கூடாதுன்னு தியேட்டர் ஆளுங்க கிட்ட சொல்லிட்டாரு. அதனால, நான் உள்ள போகாம, வெளியில இருக்குற பாறைல படுத்துட்டு வசனத்தை மட்டும் கேட்டுட்டு இருப்பேன். அதே தியேட்டர்ல, 10-வது முடிச்ச அப்புறம் நான் டிக்கட் கிழிக்க ஆரம்பிச்சேன். வீட்டுலயும், என் தீவிரத்தை பார்த்து எதுவும் சொல்லாம விட்டுட்டாங்க. எப்பவும் தியேட்டர்லயே இருக்குறது. ரீல் எடுக்க மதுரைக்கு போறதுன்னு என் நாட்கள் எல்லாம் தியேட்டரோடவே கழிய ஆரம்பிச்சுது.
அப்போ ராஜபாளயத்துல சில தியேட்டர்கள் இருந்தது. ஆனா அங்க புதுப்படம் ரிலீஸ் ஆகாது. செகன்ட் ரிலீஸ்தான் பண்ணுவாங்க. அந்த காலக்கட்டத்துலதான் புது வசந்தம் படம் ரிலீஸ் ஆச்சு. படம் பார்க்குறதுக்கு முந்தைய நாளே, சைக்கிள் எல்லாம் ரெடி பண்ணி வச்சிட்டேன். கையில 15 ரூபா எடுத்துட்டு, ராஜபாளையத்துல இருந்து சிவகாசிக்கு 36 கிலோமீட்டர் சைக்கிளில் போனேன். ஒரு காட்சி பார்த்து முடிச்சு, சாப்பிட கூட போகாம, அடுத்த காட்சி பார்க்க போயிட்டேன். இப்படியே இருந்த காசை வைச்சி அந்த படத்தை மூனு காட்சி பார்த்துட்டு ராத்திரி வெளிய வந்தா, கையில ஒரு ரூபாதான் இருக்கும். பசி வயித்தை கிள்ளுது. ஆனா அதையெல்லாம் மறந்துட்டு, அந்த படம் பார்த்த சந்தோஷத்தோடவே திரும்பி போனேன். இப்ப நினைச்சா கூட, நம்மளா அப்படி இருந்ததுன்னு ஆச்சர்யமா இருக்கு. சமீபத்துல ஊருக்கு போனப்ப கூட காளீஸ்வரி தியேட்டரை பார்த்தேன். இப்போ அது பாழடைஞ்சு போய் பயன்பாடு இல்லாம இருக்குறது, ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு. எனக்கு சினிமாவை கொடுத்த அந்த தியேட்டருக்குள்ள போய், கொஞ்சம் நேரம் அமைதியா உட்கார்ந்து இருந்தேன்'' என தன் வின்டேஜ் நினைவுகளை கவிதைகளாக சொன்னவர், தனது படங்களை தியேட்டரில் பார்த்த அனுபவங்களையும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
என் முதல் படமான உன்னை சரணடைந்தேன் படத்தை பார்க்க காசி தியேட்டர் போயிருந்தேன். இத்தனை வருஷ கஷ்டத்துக்கு பிறகு, நம்ம பெயரை திரையில பார்க்குறது ஒரு தனி அனுபவம்தான். அப்படி என் பெயரை பார்த்த நொடி, எனக்கு கண்ணீர் வர ஆரம்பிச்சுருச்சு. வேற எதை பத்தியும் யோசிக்கல, உடனே என் அம்மாவுக்கு ஃபோன் பண்ணி, அம்மா...ன்னு அழ ஆரம்பிச்சுட்டேன். அவங்களுக்கு என்னாச்சோ, ஏதாச்சோன்னு பயம். ''அம்மா, என் பேர் திரையில வந்துருச்சும்மான்னு'' நான் அழுகையோட சொன்னப்ப, ''இதுக்கு தானே ஆசைப்பட்ட, நல்லா இருய்யா''ன்னு அம்மா சொன்ன அந்த தருணம், வாழ்க்கையில என்னைக்கும் மறக்கமுடியாத அனுபவம். அதுக்கு அப்புறம் நாடோடிகள் படத்தை நான் பல தியேட்டர்கள் மக்களோட பார்த்திருக்கேன். அப்படி சென்னையில இருக்குற எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டர்ல, அந்த படம் 50 நாள் ஹவுஸ்ஃபுல்லா ஓடுச்சு. அந்த 50 நாளும் நான் நைட் ஷோ போயிடுவேன். அப்போ அந்த தியேட்டர்ல கடை வச்சிருக்கவங்க எல்லாம், ''ரொம்ப நாள் அப்புறம் கூட்டம் கூட்டமா மக்கள் வர்றாங்க, ரொம்ப நல்லாயிருப்பீங்க நீங்க''ன்னு மனசார வாழ்த்துவாங்க. இத்தனை வருஷ போராட்டத்துக்கு, அவங்க சொன்ன வார்த்தைகள் எல்லாம் பெரிய மகிழ்ச்சியை கொடுத்துச்சு.
இன்னொரு மறக்கமுடியாத சம்பவம், என் குருநாதர் கே.பாலச்சந்தர் சாருடன் நாடோடிகள் பார்த்தது. சத்யம் தியேட்டர்ல அவர் என் கையை பிடிச்சுக்கிட்டே படத்தை பார்க்கிறார். ஒவ்வொரு முறை ஆடியன்ஸ் கைதட்டும் போதும், அவர் என் கையை இறுக்கமாக புடிச்சுக்கிட்டு, அந்த சக்தியை எனக்குள்ள கடத்திட்டே இருந்தார். அப்போ அவர் ஒரு விஷயம் சொன்னார், 'ஒரு படத்துக்கு டைட்டில் கார்டுல இருந்தே ஆடியன்ஸ் எப்ப கைத்தட்டுவான் தெரியுமா..?, அந்த படத்தை 100 சதவீத நேர்மையோட, எந்த கவன சிதறலும் இல்லாம ஒரு படைப்பாளி உருவாக்குனா, அதை ஆடியன்ஸால ஃபீல் பண்ண முடியும். அதை இப்படிதான் கைதட்டலாக வெளிக்காட்டுவாங்க''. அதுதான் நாடோடிகள் படத்துக்கு நடந்துச்சு. அதே நேரத்துல ஏதாவது தப்புன்னு பட்டா, உடனே அதை வெளிக்காட்டிடுவார். அப்படி அவர் நாடோடிகள் பார்த்து முடிச்சுட்டு, ''எனக்கு ஓன்னு கத்தனும் போல இருக்கு. என் கிட்ட இருந்த போன கடைசி அசிஸ்டன்ட் நீ. உன்னோட இந்த வெற்றி எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கு. இந்த படம் இன்னும் காலங்கள் தாண்டி நிக்கும்'னு ரொம்பவே நெகிழ்ச்சியோட சொன்னாரு பாலச்சந்தர் சார்.'' என அழகாகவும், ஆழமாகவும் தனது தியேட்டர் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் நமது இயக்குநர்.
'நல்ல சினிமாக்கள், நல்ல மனிதர்களை உருவாக்கும்' என்பார்கள். அப்படியான நல்ல சினிமாக்களை கொடுக்க ஒவ்வொரு ஒவ்வொரு முறையும் கடுமையாக உழைக்கும் இயக்குநரின் சமுத்திரக்கனியின் க்ளாசிக் நினைவுகளை போல, அடுத்த அத்தியாயத்தில் இன்னுமொரு பிரபலத்தின் மறக்கமுடியாத மெமரீஸுடன் சந்திக்கலாம்.!