நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் தமிழ் - தெலுங்கு திரைப்படம் 'வாத்தி'.
பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படத்திற்கு தமிழில் "வாத்தி" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சார் (Sir) என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ள்ளது. கல்வித்துறையை அடிப்படையாக கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022 ஜனவரி 5 அன்று தொடங்கியது. இப்படத்துக்கு யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டராக நவீன் நூலி , இசையமைப்பாளராக G.V.பிரகாஷ் இந்த படத்தில் பணிபுரிகின்றனர்.
இப்படத்தில் தனுஷூடன் நடிகை சம்யுக்தா மேனன்,சாய் குமார், தணிகெள பரணி, சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பேரடி, பிரவீணா ஆகியோர் நடிக்கிறார்கள். கல்வித்துறையை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் டிரெய்லரில், “படிப்பு பிரசாதம் மாதிரி குடுங்க. 5 ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு மாதிரி கொடுக்காதீங்க” என்கிற வசனம் வரும். அந்த ஒற்றை வரிகளே கதையின் தன்மையை புரியவைக்கிறது.
இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் தனது ஆசிரியர்கள் பெயர் சொல்லி நன்றி சொன்ன தனுஷ், தான் வாத்தி படத்தில் ஆசிரியராக நடிக்கும்போது போர்டில் சாக்பீஸை எடுத்து எழுதியதாகவும், ஆனால் அது எங்கேயோ தொடங்கி, எங்கோயோ சென்று முடிந்ததாகவும் அந்த கையெழுத்து கன்றாவியா இருந்ததாகவும் ஜாலியாக கூறினார். தொடர்ந்து பேசியவர், “நம்ம டீச்சர்ஸோட கையெழுத்துல தான் நம்ம தலையெழுத்து. நான் டார்ச்சர் பண்ண டீச்சர், என்னை டார்ச்சர் பண்ண டீச்சர் என அனைவர் நினைவும் இப்படத்தின்போது வந்தது. ஆனால் உண்மையில் அவர்களின் கஷ்டமும் சரி, பெற்றோரின் கஷ்டமும் சரி இந்த கேரக்டரில் நடிக்கும்போது புரிகிறது. பசங்கள படிக்க வைக்கும்போதுதான் அனைத்தும் புரியவருகிறது. நானும் என் பிள்ளைகளை படிக்க வைக்கிறேன். அவர்கள் என்ன படிக்கிறார்கள் என்பது கூட புரியவில்லை. பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி எல்லாம் என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. வேறு ஏதேதோ சப்ஜெக்ட் பெயர் சொல்கிறார்கள். நாம் மூட்ட மூட்டையாக பள்ளிக்கு பைகளை எடுத்துச் சென்றோம். அவர்கள் ஒரு லேப்டாப்பை எடுத்துச் செல்கிறார்கள்.” என்று குறிப்பிட்டார்.
எனினும் இந்த படம் பிரச்சார தொனியில் இருக்காது என இப்படத்தின் இசைவிழாவில் பேசிய தனுஷ், “இந்த திரைப்படம் 90களில் நடக்கிறது. இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் 90களில் நான் பள்ளி படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் இந்த திரைப்படத்தில் 90களில் நான் வாத்தியாராக இருக்கிறேன். அந்த வேலை மிகவும் ஈஸி என நினைத்தேன். ஆனால் நடிக்கும் போதுதான் அது எவ்வளவு கஷ்டம் என புரிந்தது. படிப்பது கஷ்டம் என்று நாம் சொல்வதை விட பாடம் எடுப்பதும், தன் பிள்ளைகள் நன்றாக படித்து ஆளாகி விட வேண்டும் என்று பெற்றோர் தவிப்பதும் அதைவிட பெரிய கஷ்டம் என்பதை புரிந்து கொண்டேன். ” என்றவர், நிகழ்ச்சியில் இருந்த தன் மகன்களை பார்த்து, “படிங்கடா” என்றார்.