அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தம்பியும் நடிகருமான தனுஷ் நடித்து வரும் புதிய திரைப்படம் 'நானே வருவேன்'.
தனுஷ் நடித்த 'அசுரன்', 'கர்ணன்' ஆகிய படங்களை தயாரித்த கலைப்புலி எஸ். தாணு, நானே வருவேன் திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார்.
மேலும், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும், புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும் பணிபுரிகிறார்கள். இதில், தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா நடித்து வருகிறார்.
டபுள் ட்ரீட் போஸ்டர்
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், பூஜையுடன் இதன் படப்பிடிப்பு தொடங்கியிருந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம், புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த படத்தில் தனுஷ் இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதாக போஸ்டர் மூலம் அறிய முடிந்தது. இரண்டு வெவ்வேறு தோற்றங்களில், தாடி மீசையுடன் மூக்கு கண்ணாடி அணிந்த ஒரு தனுசும், தாடி இல்லாமல் ஒரு தனுசும் போஸ்டரில் காட்சி அளித்திருந்தனர்.
பிறந்தநாள் ஸ்பெஷல்
இந்நிலையில், 'நானே வருவேன்' படத்தின் இயக்குனரான செல்வராகவன் பிறந்தநாளான இன்று, புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பாக, தனுஷ் இரண்டு லுக்கில் போஸ்டரை வெளியிட்டிருந்த படக்குழு, தற்போது தனுஷ் மற்றும் செல்வராகவன் ஆகியோர் இருக்கும் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, செல்வராகவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.
சிகரம் தொடணும்
"இயக்கத்தில் சிகரம் தொட்ட @selvaraghavan, நடிப்பிலும் சிகரம் தொட வாழ்த்துக்கள்" என படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, தன்னுடைய ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். இதனை பகிர்ந்த செல்வராகவன், தயாரிப்பாளர் தாணுவுக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
வைரலாகும் போஸ்டர்
உடைந்த கண்ணாடி ஒன்றில் மேல்பக்கம் தனுஷ் முகமும், கீழே தாடி, மற்றும் அதிக முடியுடன் மாறுபட்ட செல்வராகவனின் தோற்றமும் இந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. நானே வருவேன் படத்தின் புதிய போஸ்டர், தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.