மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் கர்ணன்.
கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் கதை நிகழும் காலகட்டம் நடிகர் உதயநிதி சுட்டிக் காட்டிய பின்பு 90களின் பகுதி என மாற்றப் பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் வரும் கற்பனைக் கதைக்கான, நிஜ சம்பவம் நிகழ்ந்த கொடியங்குளம் பகுதிக்கு Behindwoods ஒரு பிரத்தியேக விசிட் அடித்தது.
அதில், கர்ணன் படத்தில் கண்ணபிரான் நட்டி தன் போலீஸ் படையுடன் வரும்போது, தனுஷ், லால் உள்ளிட்டோர் தஞ்சம் அடைந்திருக்கும் உயரமான தண்ணீர் தொட்டி, அறிமுகக் காட்சியில் தனுஷ் மீனை இரண்டாக வெட்டும் அந்த குளம் இன்னும் பல விஷயங்களை Behindwoods பிரத்தியேகமாக படம் பிடித்துள்ளது.
இப்பகுதி மக்கள் இப்படம் மற்றும் உண்மை சம்பவம் குறித்த பல்வேறு நினைவுகளை பகிர்ந்துள்ளனர். ஒருவர் தனது சிறு வயதில் பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒளிந்துகொண்டதாகவும், போலீஸார் ஊர் பெரியவர்களை அடித்து அழைத்து சென்றதாகவும் ஒருவரின் காலில் சுட்டதாகவும், 72 போலீஸ் வண்டிகளில் போலீஸ் வந்ததாகவும், ஒன்றரை கிலோ மீட்டருக்கு போலீஸ் வண்டி மட்டுமே நின்றதாகவும் குறிப்பிடுகிறார். மேலும் அப்போது கலெக்டர் வந்து சென்றதும், போலீஸார் ஊர் மக்களை அடித்து, துப்பாக்கிச் சூடு நடத்தியது, படத்தில் பொடியங்குளம், பெரியவர்களை போலீஸார் அழைத்துச் சென்று அடித்தது என அனைத்தையும் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தில் குறிப்பால் சொல்லியிருப்பது அத்தனையும் உண்மை தான் என்றும் கூறுகிறார்.
ஒரு பாட்டி கூறும்போது போலீஸார் வந்தவுடனேயே ஊர் மக்களை அடித்த காட்சியை பார்த்ததாகவும், பலர் போலீஸார் அடித்ததால் நாள் பட நாள் பட உயிரிழந்ததாகவும், போலீஸார் வந்தபோது ஊர் மக்களின் வீட்டில் இருந்த வெங்காயம் வெட்டும் கத்திகளை கூட எடுத்து வைத்து ஆயுதம் வைத்திருந்ததாக தங்கள் மீது பழி சுமத்தியதாகவும், கடைகளை அடித்து நொறுக்கியதாகவும், கிணற்றில் மருந்து ஊற்றி வைத்துவிட்டதாகவும அப்போது டாக்டர் கிருஷ்ணசாமி அனைவரையும் புகைப்படம் எடுத்து தங்களை காப்பாற்றியதாகவும் தெரிவிக்கிறார். குறிப்பாக பஸ் ஸ்டாப்புக்காக தான் இந்த பிரச்சனை நடந்ததாகவும், பின்னர் 1996-ல் பஸ் ஸ்டாப் தாங்களே கட்டிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
இன்னொரு பெரியவர் வேறோர் சம்பவத்தை மனதில் வைத்துக்கொண்டு கொடியங்குளம் மக்களை குறிவைத்து தாக்குதல் நிகழ்த்தியதாகவும், அப்படி செய்தால் மற்றவர்களுக்கு பயம் வரும் என்று அவர்கள் நினைத்ததாகவும் குறிப்பிடுகிறார்.
அத்துடன் அந்த ஊர் மக்களை அடித்து அவர்களின் துணி மற்றும் அத்தியாவசிய பொருட்களை அந்த ஊர் கிணற்றில் போட்டுவிட்டதால், மக்களால் வெளியேவே செல்ல முடியவில்லை என்றும் அந்த கிணறை மட்டும் தான் படத்தில் காட்டவில்லை என்றும், காட்டியிருந்தால் இன்னும் கர்ணன் படம் அழியா சுவடுகளாய் நெஞ்சில் நிற்கும் என்றும் எனினும் படத்தில் சொல்லப்பட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் உண்மையே என்றும் அவ்வூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.