பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வந்தார்.
சந்தோஷ் நாராயணன் இசையில் கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் விழாவில் பேசிய மாரி செல்வராஜ் தனுஷ் தன்னை அழைத்து கதை கேட்டது, அதை அவரே தயாரிப்பாளரிடம் கூறியது, தன்னை நம்பி முழு சுதந்திரம் கொடுத்து நீங்கள் உங்கள் படத்தை எடுங்கள் என ஊக்கம் தந்தது முதல் அத்தனையையும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
இதனிடையே இந்த பட விழாவுக்கு வருகை தரவியலாத தனுஷ் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து அனுப்பிய கடிதத்தையும் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு விழாவில் வாசித்தார்கள். அதில், “லாஸ் ஏஞ்சல்சில் இருந்து தனுஷ். அனைவருக்கும் வணக்கம். கர்ணன் படக்குழுவினருக்கு பெரும் ஆதரவை தொடர்ந்து தந்து வரும் உங்கள் அனைவருக்கும் நன்றி. கர்ணன் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். நான் ஸ்பெஷலாக நினைக்கும், கொண்டாடும் பலர் இந்த படத்தில் இருக்கிறார்கள். ஒரு நடிகனாகவும் மனிதனாகவும் நிறைய விஷயங்கள் கற்றுக்கொடுத்த படம் இது. மாரி செல்வராஜின் உறுதியும் மனித நேயமும் தினம் தினம் எனக்கு உறுதுணையாக இருந்தது. ஒரு நபர் மாரி மாதிரி நல்ல மனிதராக இருக்க முடியுமா என்று நான் அடிக்கடி யோசிப்பேன். என்னை கர்ணனாக மாற்றியதற்கும் என் வாழ்க்கையில் நீங்கள் வந்ததற்கும் ரொம்ப நன்றி மாரி. எப்போதும் இப்படியே இருங்கள். உங்களுக்கு ஒரு ஸ்பெஷலான இடம் காத்திருக்கு.
என்னையும் நான் தேர்ந்தெடுக்கும் கதைகளை நம்பும் தாணு சாருக்கு நன்றி. அவர் என் மீது வைத்திருக்கும் கண்மூடித்தனமான நம்பிக்கை ஒரு நடிகனாக எனக்கு இருக்கும் பொறுப்புகளை ஞாபகப் படுத்துகிறது. இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்கிற சக்தியை கொடுத்துக்கொண்டே இருக்கிறது. நம் மண்ணின் இசை வழியாகவும் அந்த மண்ணின் கலைஞர்கள் வழியாகவும் சந்தோஷ் கர்ணனுக்கு ஒரு யானை பலத்தை சேர்த்திருக்கிறார். அவருக்கு நன்றி.
எனக்கு நலம் விரும்பிகள் மிகவும் குறைவுதான், என்னுடைய உண்மையான நலம் விரும்பியான அவருக்கு நன்றி. இந்த இடத்தில் மீனா சந்தோஷுக்கு என்னுடைய நன்றி. அவர் தான் எனக்கு மாரி செல்வராஜை அறிமுகப்படுத்தி வைத்தார். நன்றி தேனி ஈஸ்வர் சார். உங்களுடைய பணியை அனைவரும் அவ்வளவு நேசிக்கிறார்கள். கர்ணனின் மொத்த படக்குழுவினரும் நன்றி. இந்த படத்துக்காக உடல் ரீதியாக மன ரீதியாக உணர்வு பூர்வமாக என்னைவிட அவர்கள் உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். கர்ணன் இவ்வளவு நம்பகத்தன்மையுடன் இருக்கிறதென்றால் அதற்கு அவர்களின் உழைப்பு தான் காரணம். எனக்கு தொடர்ந்து ஆதரவும் அன்பும் அளித்துவரும் என்னுடைய ரசிகர்களுக்கு நன்றி. என்னுடைய பெஸ்ட்டை கொடுப்பதற்கு எப்போதும் முயற்சிக்கிறேன். கர்ணன் உங்கள் எல்லோரையும் சந்தோஷப்படுத்தும் என நம்புகிறேன். மறுபடியும் நன்றி. கர்ணன் வருவான். கர்ணன் வருவான். சீறும் கேள்விகளை ஏந்தி வருவான். ஓம் நமச்சிவாய!” என்று தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதத்தை பற்றி பேசிய மாரி செல்வராஜ், இதில் கடைசியாக இருக்கும் ஓம் நமசிவாய மட்டுமே புரியுது சார். என்ன சொல்லியிருக்கீங்க என கேட்டதாகவும், தனுஷ் தான் இருக்கும் சூழலில் தமிழில் எழுத முடியவில்லை என கூறியதை அடுத்து தனது உதவி இயக்குநரைக் கொண்டு தமிழுக்கு மொழிபெயர்த்ததாகவும் சுவாரஸ்யமாக குறிப்பிட்டுள்ளார். பின்னர் தனுஷ்க்கு நன்றி சொல்லி நெகிழ்ந்து பேசினார். தனுஷ் நடிப்பிலான கர்ணன் படம் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாகிறது.