பிரபல நடிகரும் சமூக ஆர்வலருமான சோனு சூட் செய்த உதவியால் ஒருவர் சிறிய ஹோட்டல் ஒன்றை துவங்கியுள்ளார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சோனு சூட்
பஞ்சாப் மாநிலத்தில் 1973 ஆம் ஆண்டு பிறந்த சோனு சூட், பொறியியல் படித்துவிட்டு மாடலிங் துறைக்குள் கால்பதித்தார். 1999-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான "கள்ளழகர்" என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்து திரைத்துறையில் நடிகராக சோனு சூட் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து நெஞ்சினிலே, அருந்ததி, சந்திரமுகி ஆகிய படங்களின் மூலமாக மக்களிடையே பிரபலமானார்.
கொரோனா சமயத்தில், பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளிகள் சொந்த ஊர் திரும்ப இலவச விமான பயணத்தை இவர் ஏற்பாடு செய்துகொடுத்தார். இதன்மூலம் நாடே சோனு சூட்டை பாராட்டியது. மேலும், உதவி வேண்டி பொதுமக்கள் சமூக வலை தளங்கள் வாயிலாக கோரிக்கை வைத்தாலும் சோனு சூட் தொடர்ந்து அவர்களுக்கு உதவுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
வைரல் வீடியோ
கிழக்கு டெல்லியை சேர்ந்த ஆராதனா ரதோட் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். சோனு சூட் பெயரால் இயங்கும் அந்த ஹோட்டலை காட்சிப்படுத்தும் அந்த வீடியோவை பகிர்ந்து," உங்களுடைய உதவியின் பலனாக கிழக்கு டெல்லியில் உள்ள எங்கள் குடியிருப்புப் பகுதியில் எனது அபார்ட்மெண்டிற்கு அருகில் ஒரு சிறிய உணவகம் செயல்பட்டு வருகிறது. இவரின் சிறுதொழில் சிறப்பாக நடப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். உங்களின் உதவி கரம் இன்று அவருக்கு வேலைவாய்ப்பை அளித்துள்ளது" என்று குறிப்பிட்டு நடிகர் சோனு சூட்டையும் டேக் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில் சோனு சூட்டின் கவனத்தையும் இந்த வீடியோ ஈர்த்திருக்கிறது.
ஒரு பிளேட் நான் வேணும்
இந்த வீடியோவை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சோனு சூட்,"அந்த சகோதரரை எனக்கு ஒரு பிளேட் நான் (Naan) பரிமாறுமாறு கூறுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் நெட்டிசன்கள் பலரும் நடிகரையும் அந்த ஹோட்டல் அதிபரையும் வாழ்த்தி வருகின்றனர். இதனிடையே இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
भाई से कहो कभी हमें भी नान खिलाओ❤️ https://t.co/STQ4VKKqET
— sonu sood (@SonuSood) June 25, 2022