சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் பவுலின் ஜெசிக்கா என்கிற தீபா, இவர் அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்துக் கொண்டு சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இவர் தனது வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தீபாவின் உறவினர்கள் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர் போனை எடுக்காததால் அவரது நண்பர் பிரபாகரன் என்பவர் வீட்டிற்கு நேரில் சென்று பார்த்த பொழுது தீபா மரணம் அடைந்த தகவல் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தீபாவின் சகோதரர் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் அவர் நேற்று இரவு சென்னை வந்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகை தீபா பவுலின் ஜெசிக்கா, சமீபத்தில் வெளியான வாய்தா என்ற படத்தில் கதாநாயகியாகவும், துப்பறிவாளன் மற்றும் பல படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். டிக்டாக் பிரபலமான இவர், காதல் விவகாரத்தால் இந்த முடிவு எடுத்துள்ளதாக தெரியவந்த நிலையில், ஜெசிகா நடிப்பில் கடைசியாக வெளியான வாய்தா திரைப்படத்தின் இயக்குநர் அவர் குறித்து உருக்கமாக பகிர்ந்துள்ளார்.
அறிமுக இயக்குனர் மகிவர்மன் இயக்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் ஹீரோவாக நடித்து அண்மையில் வெளியான படம் ‘வாய்தா’. நாசர், ரெஜின் ரோஸ் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தில் புகழ் மகேந்திரனுக்கு ஜோடியாக, படத்தின் நாயகியாக நடித்துள்ளார் தீபா பவுலின் ஜெசிக்கா.
இந்நிலையில் வாய்தா படத்தின் இயக்குநர் மகி வர்மன், “வாய்தா படத்துல ஜெசிகாவுக்கு காதல் தோல்வி ஆகிடும். ஆனா, அந்த தோல்வியைக் கண்டு வருந்தாமல், ரொம்பவே மெச்சூரிட்டியா அதை ஏத்துக்கிட்டு அடுத்தக் கட்டத்துக்கு போற மாதிரியான கதாபாத்திரம் அது. அப்படி ஒரு ரோல் பண்ணின பெண், நிஜத்துல காதல் தோல்வியால் தற்கொலை செஞ்சது எனக்கு அதிர்ச்சியா இருக்கு.” என தமது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டு உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
உயிரை மாய்த்துக்கொள்வது என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிர் விலைமதிப்பற்றது. எதிர்மறை எண்ணம் மேலெழும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறை, தற்கொலை தடுப்பு தொடர்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.