'சார்பட்டா பரம்பரை' படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கியுள்ள திரைப்படம் “நட்சத்திரம் நகர்கிறது”. காதலும் காதல் சார்ந்த சமூக அரசியலும் இந்த படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷரா விஜயன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, சென்னை, கேரளாவில் நடத்தது. இந்த படத்திற்கு கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய தென்மா இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி முதல் இந்த படம் திரையரங்குகளில் ஒளிபரப்பாகிறது.
இப்படம் குறித்து ட்விட்டர் ஸ்பேஸில் நடந்த உரையாடலில், இளையராஜா குறித்த கேள்விகளுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் பதில் அளித்துள்ளார். அதில், “நட்சத்திரம் நகர்கிறது படத்தின் ட்ரெய்லரை பார்த்த பின்பு, ராஜா ராஜாதான் என்று பலரும் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக போடுகிறார்கள். இளையராஜா பாடலை கேட்பதாக இணையதளத்தில் பதிவிடுகிறார்கள். நட்சத்திரம் நகர்கிறது படத்தில் ராஜா ராஜா தான் என்கிற வசனம் வரக்கூடிய ஒரு இடம் இருக்கிறது. இதுதான் படத்தில் இளையராஜா குறித்த மதிப்பீடுகளை சரியாக முன் வைக்கக்கூடிய இடம் என்று தோன்றுகிறது. இளையராஜா மற்றும் நட்சத்திரம் நகர்கிறது உறவு குறித்து சொல்லுங்கள்” என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த பா.ரஞ்சித், “இது எதார்த்தமாக நடந்தது. இந்த நேரத்தில் இளையராஜா பற்றிய பிரச்சனைகள் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இளையராஜா குறித்து இந்த சமூகம் வைத்திருக்கும் விமர்சனங்களை ஒரு காலகட்டத்தில் நானும் முன்வைத்தவன் தான். இந்த திரைப்படத்தில் இனியன் பேசிய அத்தனை வசனங்களும் நான் கல்லூரி காலத்தில் பேசியவை தான். சென்சாரில் அந்த வசனம் போய்விட்டது. ஒரு இடத்தில், ‘எல்லாவற்றையும் கடவுள் மேலே இருந்து தருவார்’ என்று சொல்லும் பொழுது அப்படியானால் ஒரு மனிதரிடமிருந்து பிறக்கக்கூடிய கலையையும் கடவுள் தந்து விடுவாரா? அது ஒருவரிடம் இருந்து தானே வருகிறது? என்று கோபமாக தோன்றும்.
இப்படியான விமர்சனங்கள் எல்லாமே இசையமைப்பாளர்கள் மீது நானும் வைத்தது தான். அதே நேரத்தில் இளையராஜா கடந்து வந்த பாதையை ஆய்வுக்கு உட்படுத்தும்போது, இளையராஜா பெரும் இசையமைப்பாளராக மட்டுமே இங்கு இல்லை. எல்லா காலகட்டத்திலும் அரசியல் ரீதியாக விமர்சிக்கப்பட்ட ஒரு ஆளாக இருக்கிறார். அவருக்கு இதில் ஆர்வம் இருக்கிறது, இல்லை என்றாலும்... தமிழ் சமூகத்தின் பிரதிநிதியாக இருக்கும் பொழுது ஏதோ ஒரு வகையில் அவருடைய மதிப்பீடுகளை பல்வேறு காலகட்டங்களில் விவாதத்துக்கு உட்படுத்தியிருக்கிறார்கள்.
அதே சமயத்தில் பல்வேறு சிறுபத்திரிக்கை சூழலில் இளையராஜா குறித்து எக்கச்சக்கமான மதிப்பீடுகள் முன்வைக்கப் பட்டிருக்கின்றன. அவற்றை படிக்கும் போதுதான் இளையராஜா தம்முடைய இசை மூலம் நிகழ்த்திய மிகப்பெரிய வரலாற்று சாதனைகளை புரிந்து கொள்ள முடிந்தது. இந்தி இசை ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த சமயத்தில் இளையராஜாவின் இசைப்பாய்ச்சல் என்பது எந்த அளவுக்கு இங்கு, இந்தி இசைக்கு மாற்றாக தமிழிசையை முன்னிறுத்தியது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
இசையில் இளையராஜா நிகழ்த்திய மிகப்பெரிய கலைப் பணியை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த காலகட்டத்தில் நாயகன் திரைப்படத்தின் மீது ஒரு விமர்சனம் வைக்கப்பட்டது. அதாவது அந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசைதான் மிகப்பெரிய பின்னடைவு என்று வெகு மக்களால் விமர்சிக்கப்பட்டது. ஆனால் இப்போது வரை அந்த திரைப்படத்தை பார்க்கும்பொழுது, அந்த திரைப்படத்தை இசை மட்டுமே பல பரிணாமங்களுக்கு கொண்டு போவதை நாம் பார்க்க முடியும். அந்த இசை திரைப்படத்தில் அவ்வளவு வலிமை உள்ளதாக இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் மணிரத்னத்துடன் இணைந்து பணிபுரிந்த இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையானது படத்தில் இசையாகவே எடுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு இருப்பதாக வெகுஜன மத்தியில் ஒரு மோசமான விமர்சனம் முன்வைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் அவர் மீது வைக்கப்பட்ட அந்த விமர்சனங்கள் எதனால் உருவாக்கப்பட்டவை? எதனால் அந்த விமர்சனங்கள் ஏற்கப்பட்டன? என்று யோசிக்கும்போது ...இன்று வரை அந்த விமர்சனம்தான் பல்வேறு கால கட்டங்களில் அவர் மீது தொடர்ந்து வைக்கப்படுவதாக நான் பார்க்கிறேன்.
தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை தாண்டி அவருடைய இசை சமூகத்தின் பிரதிபலிப்பு. அவர் இந்த சமூகத்தில் என்னவாக பார்க்கப்படுகிறார்? எப்படி அவருடைய இசை புரிந்து கொள்ளப்படுகிறது? அவர் மீது வைக்கப்படுகிற விமர்சனங்கள் உள்ளிட்டவற்றை முக்கியமானதாக பார்க்க வேண்டியதாக இருக்கிறது. நான் அதிகமாக இசை கேட்பவனோ பாடல் கேட்பவனோ அல்ல. நான் குறைந்தபட்சமான பாடல்களைதான் கேட்டிருக்கிறேன். அந்த குறைந்த பாடல்களாகக் கூட இளையராஜா பாடல்களையே கேட்டிருக்கிறேன். அதுவும் திரைப்படங்கள் மூலமாக இளையராஜா இசையமைத்த பாடல்களையே கேட்டிருக்கிறேன். திரைப்படங்கள் மூலமாகதான் இளையராஜா எனக்கு தெரிய ஆரம்பித்தார். முள்ளும் மலரும், மௌன ராகம் - இந்த மாதிரி படங்களில் ஒரு இசையமைப்பாளர் எப்படி பணிபுரிந்தார்? என்பதை பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அந்த நேரத்தில் திரை உலகத்திற்குள் நான் வரவே இல்லை. ஆனால் எப்படி படங்களுக்கு இப்படியெல்லாம் இசையமைக்க முடியும் என்று வியந்தேன். அந்த நேரத்தில்தான், ‘தென்றல் வந்து தீண்டும் போது’ போன்ற பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்க தொடங்கினேன்.
அப்படி ஒரு முறை ஒரு ஓவிய கண்காட்சி முகாமிற்காக மதுரை சென்றிருந்தேன். அங்கு எலெக்ஷன் நேரத்தில் சில பிரச்சினைகள் நடந்து கொண்டிருந்தன. அதையொட்டி சில கொலைகள்... இது தொடர்பான விஷயங்களை அணுகுவதற்காக ஓவிய கல்லூரியில் படித்து முடித்துவிட்டு, நான் அங்குள்ள ஒரு ஊருக்கு சென்றேன். அந்த ஊர் அப்போது மிகவும் பதட்டமாக இருந்தது. அந்த நேரத்தில் இளையராஜா பாடல் ஒன்று கேட்டது. அந்த இளையராஜா பாடலின் குரலைக் கேட்டவுடன் எனக்கு கண்ணீர் பெருக்கெடுத்து ஊற்றியது. நான் ஏன் அழுதேன் என்று இப்போது வரை எனக்கு தெரியவில்லை. அப்படி ஒரு நிலத்தில் அப்படி ஒரு பதட்டமான சூழலில், நான் போகும்போது ஒரு இசை அங்கு திடீரென்று வந்து இப்படி என்னுடன் கனெக்ட் பண்ணி, எதற்காக இப்படி என்னை அழ வைத்தது? என தெரியவில்லை. அந்த இசையுடன் அந்த ஊருக்குள் நுழைந்து, அந்த பதட்டமான பகுதிக்குள் சென்று, அந்த மக்களிடம் பேசிவிட்டு வந்த அந்த மனநிலை இப்போது வரை என்னுடனேயே இருக்கிறது.
இப்படி நேரடியாக இளையராஜாவின் இசை என் உடலுக்குள் விரவியது. அப்படி இருக்கும்போது அந்த இசைக்கு பின்னால் இருக்கும் அரசியல் தன்மையை மட்டும் விமர்சனமாக எடுத்துக் கொண்டு இந்த படத்தில் (நட்சத்திரம் நகர்கிறது) பேசுபொருளாக வைத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது. அதேசமயம் அவருடைய தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை இந்த திரைப்படத்தில் விவாதத்துக்கு உட்படுத்தவில்லை. அதில் எனக்கு தனிப்பட்ட குறையுமில்லை. எனக்கு என்னுடைய கல்லூரி காலகட்டங்களில் இருந்தே அவர் மீது விமர்சனம் இருக்கிறது.
கல்லூரி காலக்கட்டத்தில் கவிஞர் பழனிவேல் என்று ஒருவர், இப்போது அவர் இல்லை. அவருக்கு எனக்கும் இளையராஜா குறித்து மிகப்பெரிய விவாதம் எப்போதும் போகும். அப்போது நான் இளையராஜாவை விமர்சித்து பேசுவேன். அவர் இளையராஜா குறித்து நேர்மறையாக பேசுவார். ஆக, அந்த அளவுக்கு இருந்தவன்தான் நான். இன்றும் எனக்கு இளையராஜா மீது விமர்சனம் இருக்கிறது.
அதே நேரத்தில் அவருடைய இசையும், அரசியல் பின்னணியில் அவர் விமர்சிக்கப்படுகிற தன்மையும் இரண்டையும் வைத்து பார்க்கும்பொழுது, அதன் பின்னால் இருக்கிற பல காரணங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த காரணங்களை ஒட்டிதான் இந்த திரைப்படத்தில் அவரை குறித்த ஒரு உரையாடலை வைப்பதற்கு ஒரு இடம் கிடைத்தது, அதையே நான் முயற்சி செய்திருக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.